Moving Image

Wednesday, August 22, 2018

சூட்சுமக் கயிறு

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் மெய்ஞ்ஞானம்

குணங்குடி மஸ்தான் சாகிபு (1788 - 1835: சென்னை) அவர்கள் ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர், சூஃபி,  ஞானச்சித்தர் என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் மீது பெரும்போதை கொண்டிருப்பவரை மஸ்தான் என்று அழைப்பது வழக்கம். சாகிப் என்றால் தோழர் என்று பொருள். ராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் பிச்சாண்டி சந்து என்று வழிகேட்டு குணங்குடியாரின் தர்க்காவை அடையலாம்.

 இவர் பல இசை உணர்வு  மிக்க பாடல்களை எழுதியுள்ளார். சமயங்களைக் கடந்த, மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது ஆசான் குணங்குடி மஸ்தான் பாடல்கள்.

இவரைப் பல தடவை கொன்றாலும் மீண்டும் உடல் பெற்று உயிர்த்தெழும் வல்லமை கொண்டவராய் இருந்தார். 

படைப்புகள்
  • நிராமயக்கண்ணி
  • மனோன்மணிக்கண்ணி
  • அகத்தீசர் சதகம்
  • நந்தீசர் சதகம்
  • ஆனந்தக் களிப்பு
  • பராபரக்கண்ணி        


அவரது அருமையான மெய்ஞானப் பாடல் ஒன்று சூத்திரப்பாவையாம் உயிரும் கயிறாக இருக்கும் சுவாசத்தை பற்றியது.




சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
அதிசூட்சும கயிற்றினைப் பாரடா


நேத்திரம் இரண்டிலும் நேரில் இலங்கிய
நீடொளி  போன்றது  தேட அரிதாகி 
காத்திரம் உள்ளது யாவும் பொதிந்தது
கையிலும் காலிலும் எட்டப்படாதது

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
அதிசூட்சும கயிற்றினைப் பாரடா


சாத்திர வேதம் சதகோடி கற்றாலும்
சமயநெறிகளினால் ஆச்சாரம் பெற்றாலும்
பாத்திரம் ஏந்தி புறத்தில் அலைந்தாலும் 

பாவனையால் உடல் உள்ளம் உலைந்தாலும்
மாத்திரை நேரம் எமன் வரும் அப்போது

 மற்றொன்றும் உதவாது உதவாது


சூத்திரமாகிய தோணி கவிழும் முன் 
சுக்கானை நேர்படுத்துஇக்கணமே சொன்னேன்

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்

சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
அதிசூட்சும கயிற்றினைப் பாரடா


உற்ற உறவின்முறையார் சூழ்ந்திருந்தென்ன
ஊருடன் சனங்களெல்லாம் பணிந்து இருந்தென்ன
பெற்றோரும் பெண்டீரும் பிள்ளை இருந்தென்ன
பேணும் பெருஞ்செல்வம் ஆணவத்தால் என்ன

கத்தன் பிரிந்திடின் செத்த சவமாச்சு 
காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு
எத்தனைபேர் நின்று கூக்குரல் இட்டாலும்
எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ -- இந்த

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினைப் பாரடா
அதிசூட்சும கயிற்றினைப் பாரடா


மாயாப்பிறவி வலையை அடைத்திட
மாறாத் தியானமனத்தினில் இணைத்திட
காயாபுரிக் கோட்டை கைக்குள் அகப்பட 
காணும் மணிச்சுடர் தானே விளங்கிட

ஆயும் அறிவுடன் யோகத்தினால் எழும்
ஆனந்தத் தேனை உண்டு அன்புடனே தொழும்
தாயாய் உலகத்தை ஈன்ற குணங்குடி 
தற்பரனைக் கண்டு உவப்புடனே சென்று

சூத்திரப்பாவை கயிறற்று வீழும் முன்
சூட்சுமக் கயிற்றினை பாரடா
அதிசூட்சும கயிற்றினை பாரடா



இதுவே சாகாக்கல்வி... மரணமில்லா  பெருவாழ்வு.!

பொருள்:
காத்திரம் - உறுதியானது
கத்தன் -   தலைவன்; கருத்தன் , கர்த்தா



1 comment:

  1. மிக அருமை ! வாழ்க வளமுடன் !
    இந்தப்பகுதியில் பதிவிட பாவம் கழியும் ! புண்ணியம் பெருகும் !

    ReplyDelete