Moving Image

Tuesday, March 21, 2017

வேற்குழவி வேட்கை (பதம் பிரித்து பொருளுடன்) -மிக இனிய mp3யுடன்





இனிய தாலாட்டுப் பாடல் -வேல் குழவியை வரவேற்றுத் தழுவி உச்சி மோந்து மெய்மறக்க! குழந்தைப் பேறு வேண்டுவோர் உள்ளன்புடன் உணர்ந்து ஓத/ பாட வேண்டிய பாடல்!

        இவ்வினிய பாடல் துர்மதி வருட மார்கழி மாதம் 11ந் தேதி ஞாயிறன்று
               பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.


சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.  விளக்க உரை புலவர் பி.மா. சோமசுந்தரனார்
பதினே ழொன்றும்விழை செய்ய  பாத மோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே. 
பதம் பிரித்து:
பதினேழ்  ஒன்றும்விழை செய்ய  பாதம்  ஓலிடநன்
மதிபோல் மாமைமுக மண்டலம்    ப்குக்கநகுங்
கதியே வேற்குழவீ  நின்னைக் காதலால்   த்ழுவ
நிதியே வாராயோ கைகள்  நீளுகின்றனவே
தேவர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர் எனப்படும் பதினெட்டுக் கணங்களும் போற்றுகின்ற சேவடி (யில் உள்ள தண்டை, கிண்கிணி முதலியவை) ஒலித்திடக் களங்கமற்ற நிலவை ஒத்த நின் அழகிய முகமண்டலம் ஒளி செய்யும்படி புன்முறுவல் செய்யும் (உயிர்களுக்குப்) புகலிடமாய் உள்ளவனே! வேல் ஏந்திய குழந்தைத் திருமேனி கொண்டவனே! என் செல்வமே! உன்னைக் காதலோடு தழுவிக் கொள்ள என் கைகள் நீளுகின்றனவே. நீ வந்தருளாயா?

1
சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.
சீவி முடித்தசிகை செம்பொன் சுட்டி நன்குழைகள்
மேவும் உ றுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ !
ஏவல் கொடுத்தருள  எண்ணி என்முன் வாராயோ?
கூவை வெறுத்த  கண்கள் இச்சை கொள்ளு கின்றனவே.
சீவி முடித்த தலையில் செம்பொன்னாலான சுட்டியும், காதுகளில் நல்ல குண்டலங்களும் ஒளி செய்ய விளையாடும் வேற்குழவீ! உலகத்தைக் காண வெறுக்கும் என் கண்கள் உன்னைக் காண இச்சை கொள்ளுகின்றனவே! என்னைப் பணிகொள்ள எண்ணி என் முன் வந்தருளாயா?

2
பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.
பாவேறுஞ்  சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ !
சே ஏறுன்   பவளத் தெய்வ வாயையே  திறந்து
தூவேறு  இன்கரைகள்  இங்குச் சொல்ல வாராயோ?
கோவே! என்செவிகள்  இச்சை கொள்ளு கின்றனவே.
பாவலர் மெச்சிப் பாடும் வேற்குழவீ! மிகச் சிவந்த உனது பவளம் போன்ற தெய்வத் திருவாயைத் திறந்து தூய இனிய மொழிகளைக் கூறுதற்கு இங்கு வந்தருளாயா? என் இறைவனே! உன் மொழிகளைக் கேட்பதற்கு என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே.

3
பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

பொன்  ஆர் கண்டசரம் நன்கு பூண்ட தங்க ஒளிக்
கொன்  ஆர் வேற்குழவீ !  நல்ல கொவ்வை 
நின் இதழை 
என் ஆர் வந்தீர இங்கு நல்க வாராயோ?
உன் ஆர் உண் நிலையும் வாயும் ஊறுகின்றனவே.
பொன்னாலாகிய கண்டசரத்தை நன்கு அணிந்து பொன் ஒளி செய்யும் பெருமையுடைய வேற்குழவீ! உன்னை எண்ணுகின்ற உள்ளமும் வாயும் ஊறுகின்றனவே! என் ஆர்வம் தீரும்படி நல்ல கொவ்வைக்கனி போன்ற நினது வாயிதழை எனக்குத் தருதற்கு இங்கு வந்தருளாயா?

4
எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ
எண் ஏறும்  பல  அயில் என்ற வேல்பிடித்து   அசையும்
கண்ணே! செங்குழுவீ !  என்றன் கண்கள் நாடு  அழகே!
தண் ஏறும்  வதன  முத்தந் தாராயோ   பிறிது
நண்ணா என் உளந்தான் நின்னை நாடு கின்றதரோ
எண்ணுதற்கு அரிய வன்மையுடைய கூரிய வேலைப் பிடித்துக் கொண்டு வரும் கண்ணே! சிவந்த குழந்தைத் திருமேனியனே! எனது கண்கள் நாடும் அழகனே! வேறு எதையும் நாடாத என் உள்ளம் உன்னை நாடுகின்றதே. இனிமை நிரம்பிய உன் திருவாயால் எனக்கு முத்தம் தந்தருளாயா?

5
முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.
முத்தே! மாமணியே! முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்து  ஆரம் புனைந்து என் முன்னர் வாராயோ? உ ழலுஞ்
சித்து ஆர்   வேற்குழவீ ! உச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே! என்  மூக்கில் இச்சை மீறு கின்றதரோ.
முத்தே! மாணிக்கமே! திருவிளையாடல் செய்யும் ஞான மேனியனாகிய வேற்குழவீ! யாவற்றுக்கும் மூலமானவனே! நினது உச்சியை நன்கு மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மிகுகின்றதே! முல்லை, வெட்சி, நல்ல கடம்ப மலர்களைத் தொடுத்த மாலையணிந்து என் முன்பு வந்தருளாயா?

6
ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
ஐ ஆர் நல் அரையில் பொன்  வடங்கள் ஆட உழல்
வை ஆர் வேற்குழவீ ! இங்கு வாராயோ?  கால்கள்
மை ஆர் கண்மலர்கள் இன்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா என் மூக்கில்   இச்சை மீறுகின்றதரோ
அழகு நிரம்பிய நல்ல இடையில் பொன் வடங்கள் ஆடும்படி விளையாடும் கூரிய வேலையுடைய குழவீ! நினது கால்களையும் மையிட்ட கண்களையும் இன்பம் பெருகும்படி மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மெய்யாய்ப் பெருகுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?

பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.
பொன்போல் மேனியிலே நல்ல பூமணங்  கமழும்
இன்பே! வேற்குழவீ ! இங்கு வாராயோ? விரியா
அன்பு ஆர் புன்முறுவல் செய்யும் ஆர்வில் பல் அழகென்
துன்பு ஈர் அம்பு  எனவே  நெஞ்சம் துள்ளு கின்றதரோ.
பொன் போன்ற நினது திருமேனியிலே நல்ல மலர் மணம் கமழும் இன்பனே! வேற்குழவீ நீங்காத அன்பு விளங்கும் புன்முருவல் செய்கின்ற விருப்பத்தால் தோன்றும் நினது பல்லழகு எனது துன்பத்தை அழிக்கின்ற அம்பாகும் என்று என் நெஞ்சம் கூத்தாடுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?

8
கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.
கள்ளார் செங்கரும்பே! கண்டு தேனே! இன்னமுது உண்
கிள்ளாய்! வேற்குழவீ ! அன்பர் கேளே! மாது உமையாள்
பிள்ளாய்! கண்ணி ஒன்று நல்ல பெட்பில்  நான் தருவேன்
தள்ளாதே கொளற்கு  என் முன்னர் வாராயோ தகையே.
இனிமை நிரம்பிய சிறந்த கரும்பே! கற்கண்டே! தேனே! இனிய அமுதத்தை உண்ணும் கிளிப்பிள்ளையே! வேற்குழவீ! அன்பரின் அன்பனே! உமாதேவியின் திருமகனே! நீ அணிவதற்கான நல்ல மாலை ஒன்று நான் அன்போடு தருவேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள என் முன்பு வந்தருளாயா!

9
மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.
மாண்பு ஆர் சந்தமுனி  இன்ப வாழ்வே! நின்  எழிலைக்
காண்பார் வேறு அழகு  இங்குக் காண்பார் கொல்லோ? நான்
ஊண்  பாடு அஞ்சி உனை நன்கு காண்பான் இன்றுவந்தேன்
வீண்  போகாதபடி  இங்ஙன் வாராய் வேற்குழவீ.
மாண்பு மிகுந்த சந்த முனிவராகிய அருணகிரிநாதரின் இன்ப வாழ்வே! வேற்குழவீ! நினது அழகைக் காணும் பேறுபெற்றோர் இவ்வுலகில் வேறு ஒன்றையும் அழகு என்று காண்பாரோ? காண மாட்டார். இருவினை நுகர்ச்சிக்கு அஞ்சிய நான் உன்னை நன்கு காண இன்று வந்துள்ளேன். எனது எண்ணம் வீணாகாதபடி இங்கு வந்தருள்வாயாக.

10
சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்

Sunday, March 19, 2017

ஸ்ரீ "பாம்பன் ஸ்வாமிகள்" அருளிய பகைகடிதல் விளக்கத்துடன்

 ஸ்ரீ     "பாம்பன் ஸ்வாமிகள்" அருளிய பகைகடிதல் 

பாம்பன் சுவாமிகள் பாடல் தொகுப்பில் ஆறாவது மண்டலத்தில் உள்ள “பகை கடிதல்” என்னும் இப்பதிகத்தை பக்தியுடன் உள்ளம் உருக பாட திருமயில் மீது செவ்வேட்பரமனைத் தரிசிப்பர்; பகையை வெல்வர்.”என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!
 "மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!” என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!

மூலப்பதிகம்:

திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே 
இருடபு மொளியுருவே யெனநினையெனதெதிரே 
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே.

மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை  தருமுருவே 
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே 
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே.

இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா 
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே 
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே.

பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால் 
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே 
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே.

அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே 
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே 
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.

இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே 
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர் 
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே.

எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான் 
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள் 
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே.

இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே 
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே 
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே.

இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர்  புகழ்செயவே 
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே 
குகபதி யமர்மயிலே கொணர்தியு  னிறைவனையே.

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே 
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே 
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
       


                                                    விளக்கம்
நன்றி : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி  மன்றம்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே 
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே 
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் தவமேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!! 

விசேடம்:
 திரு - தெய்வத்தன்மை, பேரழகு முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் - முனிவர்களுமாம். முருகவேளை அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள் பெற்றனர். இருள்தபும் ஒளியுரு - புற இருள் நீக்கும் சூரியன் போலாது அக இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. "ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி" என்பர் நக்கீரர். குருகுகள் - பறவைகள். மயில், முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச்சிறப்பால் "குருகுகள் முதல்" எனப்பட்டது. இறைவன் - எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே, மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே 
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே 
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே 
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே

விளக்கம்:
வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!!!!!

இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா 
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே 
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!!!!!

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே 
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் 
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே 
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே 
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே 
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே 
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே!தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!!!!!

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே 
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் 
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே 
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் 
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் 
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே 
பலபல களமணியே பலபல பதமணியே 
கலகல கல எனமா கவினொடுவருமயிலே 
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே 
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே 
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே 
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே 
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே 
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே 
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!! 

விசேடம்:
பாம்பனடிகள் பிரப்பன் வலசைப்பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டை கூடியபோது காளைக் குமரேசன் அவர் திருமுன் அகத்தியர், அருணகிரி என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான். இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம். சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இரு முனிவர் திருநாமங்களும் ஒரே பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேச நினைவும் நிழலாடக் காணலாம். இதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும் அருள் நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது உணர்ந்து மகிழத்தக்கது.

For english verses and explanation  http://www.kanchiforum.org/forum/viewtopic.php?t=63&postdays=0&postorder=.&start=3100