Moving Image

Tuesday, March 21, 2017

வேற்குழவி வேட்கை (பதம் பிரித்து பொருளுடன்) -மிக இனிய mp3யுடன்





இனிய தாலாட்டுப் பாடல் -வேல் குழவியை வரவேற்றுத் தழுவி உச்சி மோந்து மெய்மறக்க! குழந்தைப் பேறு வேண்டுவோர் உள்ளன்புடன் உணர்ந்து ஓத/ பாட வேண்டிய பாடல்!

        இவ்வினிய பாடல் துர்மதி வருட மார்கழி மாதம் 11ந் தேதி ஞாயிறன்று
               பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.


சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.  விளக்க உரை புலவர் பி.மா. சோமசுந்தரனார்
பதினே ழொன்றும்விழை செய்ய  பாத மோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே. 
பதம் பிரித்து:
பதினேழ்  ஒன்றும்விழை செய்ய  பாதம்  ஓலிடநன்
மதிபோல் மாமைமுக மண்டலம்    ப்குக்கநகுங்
கதியே வேற்குழவீ  நின்னைக் காதலால்   த்ழுவ
நிதியே வாராயோ கைகள்  நீளுகின்றனவே
தேவர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், காந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர் எனப்படும் பதினெட்டுக் கணங்களும் போற்றுகின்ற சேவடி (யில் உள்ள தண்டை, கிண்கிணி முதலியவை) ஒலித்திடக் களங்கமற்ற நிலவை ஒத்த நின் அழகிய முகமண்டலம் ஒளி செய்யும்படி புன்முறுவல் செய்யும் (உயிர்களுக்குப்) புகலிடமாய் உள்ளவனே! வேல் ஏந்திய குழந்தைத் திருமேனி கொண்டவனே! என் செல்வமே! உன்னைக் காதலோடு தழுவிக் கொள்ள என் கைகள் நீளுகின்றனவே. நீ வந்தருளாயா?

1
சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.
சீவி முடித்தசிகை செம்பொன் சுட்டி நன்குழைகள்
மேவும் உ றுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ !
ஏவல் கொடுத்தருள  எண்ணி என்முன் வாராயோ?
கூவை வெறுத்த  கண்கள் இச்சை கொள்ளு கின்றனவே.
சீவி முடித்த தலையில் செம்பொன்னாலான சுட்டியும், காதுகளில் நல்ல குண்டலங்களும் ஒளி செய்ய விளையாடும் வேற்குழவீ! உலகத்தைக் காண வெறுக்கும் என் கண்கள் உன்னைக் காண இச்சை கொள்ளுகின்றனவே! என்னைப் பணிகொள்ள எண்ணி என் முன் வந்தருளாயா?

2
பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.
பாவேறுஞ்  சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ !
சே ஏறுன்   பவளத் தெய்வ வாயையே  திறந்து
தூவேறு  இன்கரைகள்  இங்குச் சொல்ல வாராயோ?
கோவே! என்செவிகள்  இச்சை கொள்ளு கின்றனவே.
பாவலர் மெச்சிப் பாடும் வேற்குழவீ! மிகச் சிவந்த உனது பவளம் போன்ற தெய்வத் திருவாயைத் திறந்து தூய இனிய மொழிகளைக் கூறுதற்கு இங்கு வந்தருளாயா? என் இறைவனே! உன் மொழிகளைக் கேட்பதற்கு என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே.

3
பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

பொன்  ஆர் கண்டசரம் நன்கு பூண்ட தங்க ஒளிக்
கொன்  ஆர் வேற்குழவீ !  நல்ல கொவ்வை 
நின் இதழை 
என் ஆர் வந்தீர இங்கு நல்க வாராயோ?
உன் ஆர் உண் நிலையும் வாயும் ஊறுகின்றனவே.
பொன்னாலாகிய கண்டசரத்தை நன்கு அணிந்து பொன் ஒளி செய்யும் பெருமையுடைய வேற்குழவீ! உன்னை எண்ணுகின்ற உள்ளமும் வாயும் ஊறுகின்றனவே! என் ஆர்வம் தீரும்படி நல்ல கொவ்வைக்கனி போன்ற நினது வாயிதழை எனக்குத் தருதற்கு இங்கு வந்தருளாயா?

4
எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ
எண் ஏறும்  பல  அயில் என்ற வேல்பிடித்து   அசையும்
கண்ணே! செங்குழுவீ !  என்றன் கண்கள் நாடு  அழகே!
தண் ஏறும்  வதன  முத்தந் தாராயோ   பிறிது
நண்ணா என் உளந்தான் நின்னை நாடு கின்றதரோ
எண்ணுதற்கு அரிய வன்மையுடைய கூரிய வேலைப் பிடித்துக் கொண்டு வரும் கண்ணே! சிவந்த குழந்தைத் திருமேனியனே! எனது கண்கள் நாடும் அழகனே! வேறு எதையும் நாடாத என் உள்ளம் உன்னை நாடுகின்றதே. இனிமை நிரம்பிய உன் திருவாயால் எனக்கு முத்தம் தந்தருளாயா?

5
முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.
முத்தே! மாமணியே! முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்து  ஆரம் புனைந்து என் முன்னர் வாராயோ? உ ழலுஞ்
சித்து ஆர்   வேற்குழவீ ! உச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே! என்  மூக்கில் இச்சை மீறு கின்றதரோ.
முத்தே! மாணிக்கமே! திருவிளையாடல் செய்யும் ஞான மேனியனாகிய வேற்குழவீ! யாவற்றுக்கும் மூலமானவனே! நினது உச்சியை நன்கு மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மிகுகின்றதே! முல்லை, வெட்சி, நல்ல கடம்ப மலர்களைத் தொடுத்த மாலையணிந்து என் முன்பு வந்தருளாயா?

6
ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
ஐ ஆர் நல் அரையில் பொன்  வடங்கள் ஆட உழல்
வை ஆர் வேற்குழவீ ! இங்கு வாராயோ?  கால்கள்
மை ஆர் கண்மலர்கள் இன்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா என் மூக்கில்   இச்சை மீறுகின்றதரோ
அழகு நிரம்பிய நல்ல இடையில் பொன் வடங்கள் ஆடும்படி விளையாடும் கூரிய வேலையுடைய குழவீ! நினது கால்களையும் மையிட்ட கண்களையும் இன்பம் பெருகும்படி மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மெய்யாய்ப் பெருகுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?

பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.
பொன்போல் மேனியிலே நல்ல பூமணங்  கமழும்
இன்பே! வேற்குழவீ ! இங்கு வாராயோ? விரியா
அன்பு ஆர் புன்முறுவல் செய்யும் ஆர்வில் பல் அழகென்
துன்பு ஈர் அம்பு  எனவே  நெஞ்சம் துள்ளு கின்றதரோ.
பொன் போன்ற நினது திருமேனியிலே நல்ல மலர் மணம் கமழும் இன்பனே! வேற்குழவீ நீங்காத அன்பு விளங்கும் புன்முருவல் செய்கின்ற விருப்பத்தால் தோன்றும் நினது பல்லழகு எனது துன்பத்தை அழிக்கின்ற அம்பாகும் என்று என் நெஞ்சம் கூத்தாடுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?

8
கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.
கள்ளார் செங்கரும்பே! கண்டு தேனே! இன்னமுது உண்
கிள்ளாய்! வேற்குழவீ ! அன்பர் கேளே! மாது உமையாள்
பிள்ளாய்! கண்ணி ஒன்று நல்ல பெட்பில்  நான் தருவேன்
தள்ளாதே கொளற்கு  என் முன்னர் வாராயோ தகையே.
இனிமை நிரம்பிய சிறந்த கரும்பே! கற்கண்டே! தேனே! இனிய அமுதத்தை உண்ணும் கிளிப்பிள்ளையே! வேற்குழவீ! அன்பரின் அன்பனே! உமாதேவியின் திருமகனே! நீ அணிவதற்கான நல்ல மாலை ஒன்று நான் அன்போடு தருவேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள என் முன்பு வந்தருளாயா!

9
மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.
மாண்பு ஆர் சந்தமுனி  இன்ப வாழ்வே! நின்  எழிலைக்
காண்பார் வேறு அழகு  இங்குக் காண்பார் கொல்லோ? நான்
ஊண்  பாடு அஞ்சி உனை நன்கு காண்பான் இன்றுவந்தேன்
வீண்  போகாதபடி  இங்ஙன் வாராய் வேற்குழவீ.
மாண்பு மிகுந்த சந்த முனிவராகிய அருணகிரிநாதரின் இன்ப வாழ்வே! வேற்குழவீ! நினது அழகைக் காணும் பேறுபெற்றோர் இவ்வுலகில் வேறு ஒன்றையும் அழகு என்று காண்பாரோ? காண மாட்டார். இருவினை நுகர்ச்சிக்கு அஞ்சிய நான் உன்னை நன்கு காண இன்று வந்துள்ளேன். எனது எண்ணம் வீணாகாதபடி இங்கு வந்தருள்வாயாக.

10
சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்

4 comments:

  1. அருமையான பாடல் வரிகள்

    ReplyDelete
  2. ஆம் ருக்மணி அவர்களே! இசை இப்பாட்டினை மேலும் மதுரமாக்கியது!

    ReplyDelete
  3. கிடைத்தற்கு அரிய பாடல்கள் நன்றி

    ReplyDelete
  4. முருகனே மகன் ஆக வேண்டி  பிரார்த்தனை செய்ய பாம்பன் ஸ்வாமிகள் அமைத்து கொடுத்த "வேற்குழவி வேட்கை "பாடல் வரிகளை  மிக அருமையாக இசை அமைத்து மிக இனிமையாக பாடி கொடுத்துள்ள நீங்கள் அனைவரும் வாழ்க... வாழ்வில் ஓங்கி வளர்க... முருகன் துணை இருப்பான். இது காலத்திற்கும் நிற்கும்.  நன்றி.. வந்தனம்..

    ReplyDelete