Moving Image

Wednesday, December 30, 2015

திருத்தங்கல் ஸ்ரீ பழனியாண்டவர் திருக்கோவில்

                                                               ஓம்
THIRUTHANGAL SRI PAZHANI AANDAVAR TEMPLE
 
  சென்ற பதிவில் சித்தர் ஆறுமுகத்தம்பிரான்  வாழ்ந்த வீட்டைப் பார்த்தோம். இன்றைய பதிவில் முருகப்பெருமானின் திருவருளினால் கிடைக்கப் பெற்ற புதையலைக் கொண்டு அவர் கட்டிய பழனியாண்டவர் சன்னதியை தரிசிப்போம்.


குன்றில் அமர்ந்திருக்கும் குமரனைக் காண முதலில் இப்படிகளைக் கடக்க வேண்டும்.

           
 

இவ்வகலமான, ஏறுவதற்கு இலகுவான படிகளைக் கடந்தால் அய்யன் கருநெல்லிநாதரையும் மீனாட்சி அம்மையையும் தரிசிக்கலாம்.    

                                 
       

                                           
                                 
அதோ சிறிய படிக்கட்டுக்கள் தெரிகிறதே! அதன் வழியாக சென்றால் குமரனை, பழனியாண்டவரை  காணலாம். வாருங்கள்! படிகளில் ஏறும் போது பக்கவாட்டில் ஆறுமுகத் தெப்பத்தைக் காணலாம்.  தம்பிரான் இவ்விடத்திலிருந்து கோவில் அமைக்கக் கற்களை எடுத்ததால் ஏற்பட்ட தெப்பமாகும். ஊரார் முருகன் கோவில் தெப்பம் என அழைக்கின்றனர்.

                                         

 தற்பொழுது பக்தர்களின் பாதுகாப்பு கருதி   கோவில் நிர்வாகம்  கிரில்
அமைத்து உள்ளது. இச்சிறிய படிகளை கடந்து இதோ பழனியாண்டவர் தலத்திற்கு வந்துவிட்டோம். ஒற்றைக்கால் காவடியில் சிறந்த ஆறுமுகத்தம்பிரான்  பழனிமுருகனை தைப்பூத்தன்று தரிசிக்க  இயலாததால் தம் நாவை பக்தி மேலீட்டால் அறுத்த நிகழ்வும், முருகப்பெருமானின் தரிசனக் காட்சியும் ,தனக்கொரு கோவிலைக் கட்டுமாறு தம்பிரானைப் பணித்ததும், அதற்குத் தேவையான புதையலையும் காட்டிய நிகழ்வுகள் கண்ணில் தோன்றுகிறது! 

தம்பிரானின் சத்சரித்திரம் படிக்க 
ஆங்கிலத்தில் அய்யனின் hagiography


அப்பர்பெருமானின் 'நின்றத் திருத்தாண்டக' -த்தில் வரும்

காயாகி பழமாகி பழத்தில் நின்ற
 இரதங்கள் நுகர்வானும் தானேயாகி..,.....       

ஏலாதன எல்லாம் ஏல்விப்பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்றவாறே!

என்ற வரிகள் நெஞ்சை நிறைக்கின்றது!.
இப்பேற்பட்ட புண்ணிய தலத்தை தரிசனம் செய்ய என்ன பேறு பெற்றேனோ என எண்ண  கண்ணீர் சொரிகின்றது.  இப்பக்தி மேலிட்ட உணர்வுடன் முக்கண்ணனின் நெற்றிச்சுடரிலிருந்து தோன்றிய சுடரொளிப்பெருமானை தரிசிக்க மேலே செல்வோம்.            

அழகிய கோபுரம் மயிலுடன்; தம்பிரான் வாயிலையும்  காணலாம்.




இறைஆற்றலை ஈர்த்து நமக்கு நல்ல அதிர்வலைகளை தரும் அழகிய கொடிமரமும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய விதானமும்   கூடிய  பழனியாண்டவரின் கருவறையைக் காணலாம்.


மூலவராக பழனியாண்டவர். கண்குளிர, உள்ளம் உருக தரிசிப்போம்!



        பிரகாரத்தில் கன்னிமூல கணபதி,    முருகப்பெருமானின் படைசேனாதிபதியான வீரபாகு மற்றும் பாலமுருகனை தரிசிக்கலாம்.



                                                                                       

பிரகாரத்தில் அமர்ந்து சஷ்டி கவசத்தினை உள்ளம் ஒன்றி பாடி, 
ஆறாவது அறிவான முருகப்பெருமானே! 
இக்கோவிலுக்கு வந்து செல்லும் அனைவரும் சிந்தித்து வாழும் குணமும், பிறரை மதித்து, மகிழ்ந்து வாழும் குணமும், 
தீமைகளை நீக்கி நன்மைகளை நுகரும் தன்மையும், 
தெய்வீக பண்புகளும் தெய்வீகக்குணங்களும் கொண்டு 
இவ்வுலக வாழ்க்கையில் மேன்மையான நலமும் வளமும் ஆரோக்கியமும் பெற்று பிறவாப் பெருநிலை அடைய அருள்வாய் அய்யனே ! என வேண்டி தரிசனத்தைத் தொடருவோம்.

அடுத்து தம்பிரானது ஜீவசமாதி தரிசனம்!





                                                                      

Saturday, December 26, 2015

காவடிக்கூடம் இன்று 6/12/2015

                                                              ஓம்


ஆறுமுகத்தம்பிரானின் புனித இல்லம்- காவடிக்கூடம்!
AARUMUGATHTHAMBIRAN'S  KAAVADIKOODAM
       

       அய்யன் ஆறுமுகத்தம்பிரானை தரிசிக்கும் வாய்ப்பு 6/12/2015 அன்று கிடைத்தது. இப்பதிவில் அய்யனின் புனித இல்லமான காவடிக்கூடத்தை தரிசிக்கலாம்.  இப்புனிதக் கூடம் காவடிக்கூடத்  தெருவில் (முன்னர் நடுத்தெரு) உள்ளது.



                


முன்பு தம்பிரான் வசித்த எளிய குடிசை  தற்சமயம்  நாம் வழிபட ஏதுவான தாழ்வாரத்துடன் உள்ளது.

                கருவறை நுழைவாயில் மேல் இக்காவடிக்கூடம் ஆறுமுகத்தம்பிரான் வகையறாக்களால் என்று கல்கூடமாகக் கட்டப்பட்டது என வரைந்துள்ளனர்.

                                     
                         

       1933 ஆம் ஆங்கிரச வருடம் தைமாத  27ம் தேதி பூச நட்சத்திரத்தில்  9-2-1933 அன்று கட்டப்பட்டுள்ளதை மேலே உள்ள படத்தை ZOOM செய்து காணலாம். அன்று வளர்பிறை சதுர்தசி திதி வியாழக்கிழமை  என drinkpanchang.com தெரிவிக்கிறது.


   
                   உள்ளே அய்யன் பழனி முருகப்பெருமானுக்குச் சுமந்து சென்ற  புனித காவடி மற்றும் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானையும் கண்குளிர காணலாம்.

                                    

பாதுகாப்பு கருதி தம்பிரானது திருப்பாதரட்சைகள் கண்ணாடிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த பதிவில் முருகப்பெருமானின் திருவருளினால் தம்பிரான் திருத்தங்கல் குன்றில் கட்டிய கோவிலைக் காணலாம்.