Moving Image

Sunday, October 11, 2015

சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் வாழ்க்கைச் சரித்திரம்

                                                                   ஓம்    


             




         ஞானமே உருவான, சிவசக்தி ஸ்வரூபமான முருகப்பெருமானின் அருள்பெற்ற அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் வரிசையில்  தோன்றிய தெய்வீக அடியவரே திருத்தங்கல் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் ஆவார் . சிலப்பதிகாரத்தில் பாடல் பெற்றதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பாதை வேறானாலும் நாம் அடையப்போகும் இறை ஒன்றே என்று உணர்த்த,  வைணவத்தையும் சைவத்தையும் ஒன்றாக ஒரே மலையில் மக்கள் ஒற்றுமையுடன் வழிபட - ஸ்ரீ  நின்ற நாராயணப் பெருமாள் திருத்தலமாகவும்,  ஸ்ரீ கருநெல்லிநாதர் திருத்தலமாகவும் அமையப்பெற்றத் திருத்தலம் திருத்தண்கால் என்றச் சிறப்புமிக்கத் திருத்தங்கல் நகர் ஆகும். சிவகாசிக்கு மிக அருகில் உள்ள தலம் இது.

ஆறுமுகனாரின்  பிறப்பும் முருகப்பெருமானின் ஆட்கொள்ளலும்
             
            இச்சிறப்புமிக்க புண்ணியமண்ணில் 18 ஆம் நூற்றாண்டில், செந்தமிழுக்குத் தலைவனான முருகப்பெருமானின் திருவருள் பெற்ற நற்குடும்பத்தில் திரு. சின்னையா- வெள்ளையம்மாள் தம்பதியினரின் இரண்டாவது மகனாக, காவடிக்கூடம் என்று தற்பொழுது அழைக்கப்படும் இல்லத்தில்  ஸ்ரீ ஆறுமுகம் உதித்தார்.  இவருக்கு  வீரலட்சுமி என்ற தங்கையும் சண்முகம் என்ற சகோதரரும் இருந்தனர். இவர் தினமும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து ஊருக்கு மேற்கே உள்ள சிங்காரத்தோப்பில் ( தற்பொழுது கலைமகள் பள்ளி வளாகம்) குளித்து அங்கு உள்ள நந்தவனத்தில்  மலர்கள் கொய்து வந்து முருகப்பெருமானை வழிபடுவார். முருகப்பெருமானே தன் வாழ்வு என்றிருந்ததால் திருமணம் செய்யாது  ஒரு துறவியைப் போல் வாழ்ந்தார்
தம்பிரானின் திருக்காவடியும் பாதரட்சைகளும்

தன்  பக்தனின் பக்தியை சோதிக்க எண்ணிய முருகப்பெருமான் அவருக்குக் உறுத்தும்  கண்நோயைக் கொடுத்தார். பார்வைக்குறைவினால் வேதனை ஏற்பட்டாலும் முருகப்பெருமானே கதி என்று மேலும் மேலும் முருகப்பெருமானின் திருவடியைப்போற்றித் துதித்துக் கொண்டிருந்தார். இறைவன் நமக்குக் கொடுப்பதெல்லாம் இன்பமே என்ற பரிபக்குவத்துடன் சதா பழனி தண்டாயுதபாணியை தியானித்திருந்தார். ஆறுமுகனாரின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றெனக் காணும் பக்குவத்தையும், மன உறுதியையும், தன்மீது  கொண்ட தளராத   அன்பையும்  கண்ட கருணைக்கடலான திருமுருகப்பெருமான் அன்னை வள்ளியுடன் மலைக்குறவர் வேடத்தில் எழுந்தருளி அவர்தம் பிணி தீர்த்தார்.  அவரது பக்தியை மெச்சி தானே குருவாய் அவருக்கு பலயோகச் சித்திகளையும்  சித்த மருத்துவ ஞானத்தையும் நல்கினார். இவ்வாறு தனக்குக் கிடைத்த  ஞானத்தால், இரக்கவுணர்வு மிகுந்த ஆறுமுகனார்  ஏழை மக்களின் பிணி நீக்கி   மருத்துவத் தொண்டு புரியலானார்.
  
 தைப்பூசம்

          . தை மாத பவுர்ணமியன்று பூச நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளான தைப்பூசம் தமிழர்களால் மிகச் சிறந்த நாளாகக் கருதப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. முதன்முதலாக உலகம்  தோன்றியது தைப்பூசத்தன்றுதான் என்கின்றன புராண நூல்கள். அதாவது சிவசக்தி ஐக்கியமே உலக சிருஷ்டி. சிவசக்தி சொரூபமான ஸ்ரீ முருகப்பெருமானுக்கு  தன்  சக்தியினை ஜோதி சொரூபமாக -  ஞான சொரூபமான ஆயுதமாக -வேலாயுதமாக அன்னை பராசக்திதேவி தந்ததும் இந்த நாளில்தான். பழநி முதலாக முருகன் திருத்தலங்கள் தைப்பூசத் திருநாள்  வெகுவிசேஷமாக கொண்டாடப்படும். ஆறுமுகனார் தைப்பூசத்தன்று பழனிமலை முருகப்பெருமானுக்கு காவடி எடுத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் காவடி எடுத்துச் செல்லும் அழகே அழகு! சதா இறை எண்ணத்துடன் ஒரு செயல் செய்யப்படும் போது அதுவே  தவமாகிவிடும்! அவ்வாறு காவடிக்கே பெருமை சேர்த்தவர் ஆறுமுகனார்!

ஆறுமுகனாரின் புகழ்பெற்ற காவடி விரதம்!

   எவ்வுயிரையும் தன்னுயிராக  பாவிக்கும் ஆறுமுகனார் தைப்பூசத்திற்காக கார்த்திகை மாதத்திலிருந்து விரதமிருப்பார். பூசத்திற்கு எட்டு நாட்களுக்கு முன் திருத்தங்கல்லைச் சுற்றி உள்ள  முப்பது மைல் சுற்று வட்டத்தில் உள்ள ஊர்களுக்குச் சென்று ஊர் மக்களிடம் அரிசி, பருப்பு, புளி, வத்தல், காய்கறிகள் தானமாகப் பெறுவார்.  பூசத்திற்கு இருதினங்களுக்கு முன் துறவிகளுக்கும், எளியோருக்கும் கால் படி அரிசி, பருப்பு, புளி, வத்தல், காய்கறிகளை தானமாக வழங்கிவிட்டு மீதமுள்ள பொருட்களை பூசத்திற்கு முன்தினம் சமையல் செய்து ஜாதிமத பேதங்கள் உச்சம் பெற்றிருந்த அக்காத்திலேயே சமபந்தி போஜனம் இட்டார். எத்தனைப்பே்ர் வந்தாலும் திருமுருகப்பெருமானின் திருவருளால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தை அன்னதானம் செய்வார்.
               ஆறுமுகனாரின் தொண்டுள்ளத்தை உணர்ந்த மக்கள் அவர் கேட்காமலேயே பொருட்களை வழங்கினர். ஒருமுறை செவல்பட்டி ஜமீன்தார் வீட்டிற்கு தானம் வேண்டி சென்றபொது தன் ஏவலாளிடம் ,"பரதேசியை ஊரை விட்டு வெளியே போகச் சொல்" , என உத்தரவிட்டார். அதனைக் கேட்ட ஆறுமுகனார் அமைதியாக ஊரை விட்டு வெளியேறினார்.
                இறைவன் கருணையே உருவானவன். இந்த ஜமீன்தாரரை திருத்தும்முகமாகவும் எளிமையே உருவான ஆறுமுகனாரின் மேன்மையினை உணர்த்திடவும் முருகப்பெருமான் திருவுள்ளம் கொண்டார். நன்கு திடகாத்திரமாக விளங்கிய ஜமீன்தாரர் கை, கால் உணர்விழந்தார். எந்த உயர் வைத்தியராலும் இன்னதென்று நோயை அறிந்து குணப்படுத்த இயலவில்லை. தன் குலதெய்வ அறிவுறுத்தலால் தான் ஆறுமுகனாருக்குக் செய்த சிறுமையை உணர்ந்து வருந்தினார். ஆறுமுகனாரை அழைத்து வரச்சொல்லித் தன்னை மன்னித்து குணமாக்குமாறு வேண்டினார்.  முருகப்பெருமானைப் பிரார்தித்து ஆறுமுகனார் அவருக்கு திருநீறு பூச ஜமீன்தாரரின் நோய் உடனே குணமாகியது. ஜமீன்தாரர் அன்னதானத்திற்கு பெருமளவில் பொருட்கள் கொடுத்து ஆறுமுகனாருக்கு தக்க மரியாதை செய்தார்.
ஆறுமுகத்தம்பிரான் பயன்படுத்திய புனிதக்காவடி
            
           தைப்பூசத்தன்று  காலை 6 மணிக்குக் காவடி எடுத்துக் கொண்டு திருத்தங்கல் நகர்வலம் வந்து காலை 8 மணிக்கு பழனிமலைக்குப் புறப்படுவார். ஊர்மக்கள் ஒன்றுகூடி சங்கு முழங்க, கொட்டு அதிர அவரைப்பின் தொடர்ந்து சென்று வழியனுப்புவர். ஊர் எல்லையைத் தாண்டி சுமார் ஒரு பர்லாங் தூரமுள்ள கருப்பசாமி கோவில் வரையில் தான் மக்கள் கண்களுக்குத் தென்படுவார். பின்னர் ஒர் ஓங்கார ஒலியுடன் காவடி செல்லும் ஒலிதான் கேட்க முடியும். காற்றுப் போல் காவடியை எடுத்துச் செல்வார். ஆறுமுகனார் தன் ஒற்றைக் காலில் தத்தித் தத்தி, தாவித் தாவி காவடி எடுத்துச் செல்லும் காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். இன்றும் அவர் வாழ்ந்த வீட்டினைக் காவடிக்கூடம் என்றும் அத்தெருவினை காவடிக்கூடத் தெரு என்றும் கூறுவர். காவடிக்கூடத்தில் இன்றும் அவரது காவடியினையும் பாதரட்சைகளையும் மக்கள் வழிபடுகின்றனர்.
              அக்காலத்தில் பழனி செல்ல பல ஓடைகளையும், சிற்றாறுகளையும், காடுகளையும் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. ஓட்டன்சத்திரம் அருகே உள்ள நல்காசி ஆற்றில் தைமாதம் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். பல ஊர்களிலிருந்து காவடி எடுத்துச் செல்லும் பக்தர்கள் ஆற்றைக் கடக்க ஆறுமுகனாரின் வருகைக்காகக் காத்திருப்பர்.ஆறுமுகனார் முருகப் பெருமானை எண்ணி சிறிது திருநீற்றினை ஆற்றில் விட்டுப் பிரம்பால் நீரினைத் தொட ஆற்று நீர் விலகி வழி கொடுக்கும். ஆறுமுகனார் காவடியுடன் முன் செல்ல பிற பக்தர்கள் அவரைப் பின்தொடருவர்.
பழனிமலை முருகனுக்கு அக்காலத்தில் தைப்பூச நாளன்று ஆறுமுகனாரின் ஒற்றைக்கால் காவடிக்காக காத்திருந்து பூஜை செய்வர்.அவ்வளவு பிரசித்தி பெற்றது அவரது ஒற்றைக்கால் காவடி!  வருடா வருடம் தவறாது பழனியில் பகல் 12 மணி பூஜையை  முடித்து ஆறுமுகனார் ஊர் திரும்புவார். சுமார் மூன்றிலிருந்து நான்கு மணிக்குள் திருத்தங்கலிலிருந்து பழனி மலை செல்லும் அவர்  திரும்பி வருகையிலே மூன்று நாள் நடையிலே வந்து சேர்வார்!
             
              இவ்வாற்றில் மேலும் ஓர் அதிசயம் நடந்து. ஒருமுறை இவரது காவடி விரதத்துக்கு பங்கம் ஏற்படுத்த எண்ணிய சிலர், ஆறுமுகனாரின் காவடியில், தெய்வ சிந்தனையாகவே இருக்கும் அவர் அறியாது ஒரு பாத்திரத்தில் மீன் குழம்பினை ஊற்றி அனுப்பினர். ஆற்றைக் கடக்கும் சமயம் முருகப்பெருமானின் திருவருளால் அம்மீன்கள் உயிர்பெற்று துள்ளிக்குதித்து ஓடின! சதா இறைவனின் பெருமைகள எண்ணிக் கொண்டிருந்தால் இறை நம்மீது பொறுப்பேற்றுக் கொள்ளும். பிறர் மீது தீய எண்ணம் கொள்ள விடாது அவர் தீங்கு செய்தாலும் நம்மை என்றும் நல்எண்ணங்களுடனே வாழ வைக்கும்.

ஆறுமுகனார் ஆறுமுகத்தம்பிரான் ஆன நிகழ்வு!

            ஒருநாள் தம்பிரான் தங்கை வீரலட்சுமி அம்மாள் பழனி முருகனைத் தரிசிக்கும் ஆவலைத் தெரிவித்தார்.  போக்குவரத்து வசதிகள் குறைந்த அக்காலத்தில் பழநி சென்று வரும் இன்னல்களைத் தங்கைக்கு எடுத்துரைத்தார். ஆனால் முருகப்பெருமானை தரிசிக்கப் பிடிவீதமாக இருந்து ஒரு தைப்பூச நன்னாளில் அண்ணனுடன் கிளம்பிவிட்டார். தங்கையுடன் செல்வதால் பழநி சென்றடைய காலதாமதமாகிவிட்டது. அவருக்குக் காத்திருந்தாலும் காலதாமதம் கருதி  முருகன் சள்ளிதானத்தில் பூஜைகள் முடித்தனர்.
            தாமதமாக வந்த ஆறுமுகனார் முருகப்பெருமானை தரிசிக்க இயலாததால் மிகுந்த வருத்தமுற்றார். "வருடம் முழுக்க இந்நன்னாளில் உன்னை தரிசிக்க வேண்டும் உன் புகழ் பாட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் வரும் எனக்கு இன்று கண்குளிர உன் தரிசனம் கிட்டவில்லை. உன் முன் உள்ளம் உருகி பாடவும் இயலவில்லை. உன்பெருமைகளைப் பாட இயலாத என் நா எதற்கு?" என்று கூறி தன் நாவினைத் துண்டித்தார். அவரது அளப்பரிய பக்தியைக் கண்ட தண்டாயுதபாணி ஆறுமுகனாருக்குக் காட்சியளித்து அன்புடன், "ஆறுமுகத்தம்பிரானே! " என விளித்து "கலங்காதே! உனக்குத் தனிமையில் காட்சி தரவே தாமதமாக வரவழைத்துத் திருவிளையாடல் புரிந்து சோதித்தோம். உன் மெய்யான பக்தியினால் சோதனைகளை வென்றாய்.  இனி எம்மைத் தரிசிக்க பழனிவர வேண்டாம். உனது ஊரான திருத்தங்கல் குன்றின் மீது எமக்குக் கோவில்கட்டி என்றும் வழிபடு. தைப்பூச நாளில் அங்கேயே காவடி செலுத்தினால் போதும்", எனக் கூறி நாவினை பழைய நிலையடையச் செய்தார். ஆலயங்கட்டுமளவிற்குத் தம்மிடம் பொருள் இல்லாததை தம்பிரான் எண்ண, "சென்று வா, வழி பிறக்கும்", என ஆசி கூறி மறைந்தார்.

புதையல் கிடைத்தலும் கள்ளர்களை நல்வழிப்படுத்தலும்
                
 இறைதரிசனம் பெற்று பிறவிப்பயனடைந்த ஆறுமுகத்தம்பிரான் தம் தங்கையுடன் திருத்தங்கல் நோக்கி பயணமானார். இரவு துவங்கிய போது, ஓட்டன்சத்திரம் என்ற இடத்தில் தங்கினர். அங்கு சமையல் செய்ய அடுப்புக்காகக்குழி தோண்டிய பொழுது பானை ஒன்று தட்டுப்பட்டது. பானை நிறையப் பொன்னைக் கண்டு திருக்கோவில் கட்ட முருகப்பெருமானே கொடுத்த நிதி என உணர்ந்து அப்புதையலைப் பத்திரப்படுத்தினர். பின் சமைத்து உண்டுவிட்டு அயரந்து உறங்கினர்.
                 அவ்வேளையிலே கள்ளர் கூட்டம் தம்பிரானுக்குக் கிடைத்தப் புதையலைக் களவாடிச் சென்றனர். சில அடிதூரம் செல்வதற்குள் கள்ளர் கூட்டம் முருகப்பெருமானின் திருவிளையாடலால் கண்ணொளி பறிக்கப்பட்டு அலறியது. அவர்களின் கூக்குரலைக் கேட்டு விழித்தார் தம்பிரான். தம் தவறை உணர்ந்த கள்ளர்கள் புதையலைத் தம்பிரானிடம் ஒப்படைத்து அவரது மன்னிப்பையும் மீண்டும் கண்பார்வையினை மீட்டுத் தரவும் வேண்டினர். முருகப்பெருமானின் பேரருளை எண்ணி நெகிழ்ந்த தம்பிரான் திருமுருகனைப் பிரார்த்தனை செய்ய கள்ளர்களுக்கு மீண்டும் பார்வை கிடைத்தது. இறை அணுக்கத்தில், அரவணைப்பில் நம் தவறுகள் எல்லாம் கரைந்து விடும். கள்ளர்கள் நல்லர்கள் ஆயினர்.
                      அந்நல்லவர்கள் தங்கள் செயலுக்குப் பரிகாரம் செய்ய விரும்பினர். அதற்குத் தம்பிரான் தைப்பூசத் திருநாளில் பழநி பாதயாத்திரை வரும் பக்தர்களுக்குச் சத்திரம் அமைத்து அன்னதானம் வழங்குமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே அந்நல்லவர்களும் இன்று ஓட்டன்சத்திரம் என்றழைக்கப்படும்  இடத்தில் அன்னதானச் சத்திரம் அமைத்து பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு தொண்டு செய்து வந்தனர். இன்றும் அவர்தம் வம்சா வழியினர் அத்தொண்டினை நிறைவாகச்  செய்து வருகின்றனர்.

 ஆலயப்பணி    
            
                        திருத்தங்கல் திரும்பிய ஆறுமுகத்தம்பிரான் முருகப்பெருமானின் திருவருளால் கிடைத்தப் புதையலைக் கொண்டு திருத்தங்கல் குன்றின்மீது பழநி தண்டாயுதபாணிக் கோவிலைப் போன்றதொரு கோவிலைக் கட்டினார்.  தினமும் உள்ளன்புடன் வழிபாடுகள் செய்யலானார். ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளன்று முருகப்பெருமானின் கட்டளைப்படி இக்கோவிலிலேயே காவடி செலுத்தி வரலானார். 

தம்பிரானின் இறை ஐக்கியம்

                        தம்பிரானின் இறை தொண்டு பல ஆண்டுகள் தொடர்ந்தன. தான் விரைவில் இறையோடு ஐக்கியம் ஆகப்போவதை உணர்ந்த தம்பிரான் தன் சகோதரரிடமும் ஊர்பெரியார்களையும் அழைத்துத் தனது உடலைத் தான் நித்தமும் வணங்கிவந்த திருத்தங்கல் பழனி முருகப்பெருமான் சன்னதியைப் பார்த்தவாறு  அடக்கம் செய்யக் கூறினார். அனைத்துச் சமூகத்தினரும் அவரது விருப்பத்தை அப்பொழுது  ஏற்றுக்கொண்டனர். முருகப்பெருமானின் தைப்பூச விழாவினை நிறைவாக  முடித்து, அடுத்த நாள் தம்பிரான்  இறையடி அடைந்தார்.
                         அவர் குறிப்பிட்டபடி முருகப்பெருமான் சன்னதியைப் பார்க்குமாறு அவரை அடக்கம் செய்ய பக்தர்கள் முற்பட,  முன்பு தம்பிரானிடம் அவர் விருப்பத்தை நிறைவேற்ற ஒத்துக்கொண்ட பிற சமூகத்தார் ஜாதி பாகுபாடு கருதி அவர் குறித்துக் கொடுத்த இடத்தில் சமாதி அமைக்க மறுத்தனர். மக்களின் எண்ணம் என்னவென்றால், தம்பிரான் உயிருடன் இருக்கும் போது மட்டுமே முருகப்பெருமானின் திருவருள் பெற்றவர் எனவும் உயிர் இல்லாவிட்டால்   இறையருள் அவரை விட்டு நீங்கிவிடும் என எண்ணி, அவரிடம் கொடுத்த வாக்கினைத் தவறவிட்டனர்.எனவே பழனியாண்டவர் சன்னதி முன் அடக்கம் செய்திட இயலாமல் ஆலய மணியோசை கேட்கும்வண்ணம் சற்றுத் தள்ளி வடபுறத்தில் ஆலாவூரணிக்கரையில் ஆறுமுகத்தம்பிரானுக்குச் சமாதி அமைத்தனர். 
                       
 சத்தியம் தவறிய ஊர்மக்களின் நல்வாழ்வு குன்றத்தொடங்கியது. ஊரின் வளர்ச்சி குன்றியது. ஊர் மக்கள் ஒன்று கூடி தங்கள் செயலுக்கு வருந்தி ஆறுமுகத்தம்பிரான் நினைவாக முருகன் கோவில் எதிரில் உள்ள பாறையில் கல்தூண் அமைத்து தீபமேற்றி வழிபட்டு வளமடைந்தனர். இன்றும் அக்கல்தூணினைக்  காணலாம். 
                         
அவருடைய வம்சா வழியினர் காவடிக்கூட்ட வகையறாக்கள் எனப்படுகின்றனர். ஒவ்வொரு தைப்பூசத் திருநாள் மற்றும் அதற்கு அடுத்த நாளிலும் தம்பிரான் செய்த அன்னதானத் தொண்டினை- சமபந்தி போஜனத்தை அவரது அடியார்களும், காவடிக்கூட்ட வகையினரும் ஊர்மக்களுடன் கூடி நின்று தம்பிரானின் சமாதி மண்டபத்தில் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர். மற்றும் பால்குடங்கள், காவடிக்கள் செலுத்தி விழாவினைச் சிறப்பிக்கின்றனர். அனைத்துச் சமூகத்தினரும் அன்னதானத்தில் பங்கேற்று வாழ்வில் வளம்பெற்று வருகின்றனர்.தற்பொழுது மண்டபத்தில் பிரமிட் நிறுவப்பட்டு அதிக சக்திகளைத் தரும் ஆறுமுகத் தம்பிரான் பிரமிட் தியான பீடமாக உள்ளது. தியான பீடத்தில் ஆறுமுகத்தம்பிரானின் வாழ்க்கை வரலாறு வண்ணப் புடைப்புச் சித்திரமாக அழகுற வடிக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி அமாவாசை தினங்களில் சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஏராளமானோர் சிறப்பு வழிபாட்டில் பங்குபெற்று வாழ்வில் வளமும் நிறைவும்  பெற்று வருகின்றனர்.
                      ஆறுமுகத்தம்பிரானின் குருபூஜை தைப்பூசத்திற்கு அடுத்த நாள் இரவில் வருடாவருடம் கொண்டாடப்படுகிறது. அனைவரும் வந்து இவ்விருநாள் விழாவில் கலந்து கொண்டு ஆறுமுகத்தம்பிரானின் அருளினைப் பெறுக! வாழ்வில் வளம் பெறுக!

கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.00- 9.00
                                                                  மாலை 6.00- 8.00

5 comments:

  1. OM ennum manthirathin puthalvan engal MURUGAN✋Murugapperumaan arul petra ARUMUGATHAMPURAN avarkalai vananga vaalvil nalamum valamum peralam...Murugan arulum nammakku kitaikkum enpathil iyam illai...OM SARAVANA BHAVA...ARUMUGATHAMPURAN POTRI!!!

    ReplyDelete
  2. வருக அனுரேகா அவர்களே! முருகப் பெருமானின் திருவருள் பெற்ற சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரானது திவ்ய சரித்திரத்தை படிக்கும் அனைவருக்கும் அவரது பரிபூரண நல்லாசிகளும் வாழ்வில் வளமும் நிச்சயம் கிட்டும்!

    ReplyDelete
  3. அருமையான பதிவு... நம் முன்னோர்கள் வார்த்தைகளாக கூறிய தம்பிரான் ஐயா வரலாற்றை உலகறிய பதிவு செய்தமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி சகோதரரே... இந்த வருட தைப்பூசத்தில் சந்திப்போம்

    ReplyDelete
  4. வருக சகோதரரே! தம்பிரானை உலகறிய வைத்தது முருகப்பெருமானின் திருவருளே! தங்கள் கருத்துரை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தைப்பூசத்தில் சந்திப்போம்!

    ReplyDelete