Moving Image

Tuesday, March 21, 2017

வேற்குழவி வேட்கை (பதம் பிரித்து பொருளுடன்) -மிக இனிய mp3யுடன்





இனிய தாலாட்டுப் பாடல் -வேல் குழவியை வரவேற்றுத் தழுவி உச்சி மோந்து மெய்மறக்க! குழந்தைப் பேறு வேண்டுவோர் உள்ளன்புடன் உணர்ந்து ஓத/ பாட வேண்டிய பாடல்!

        இவ்வினிய பாடல் துர்மதி வருட மார்கழி மாதம் 11ந் தேதி ஞாயிறன்று
               பாம்பன் சுவாமிகளால் இயற்றப்பட்டது.


சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரபேறு விருத்தியாம்.  விளக்க உரை புலவர் பி.மா. சோமசுந்தரனார்
பதினே ழொன்றும்விழை செய்ய  பாத மோலிடநன்
மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே. 
பதம் பிரித்து:
பதினேழ்  ஒன்றும்விழை செய்ய  பாதம்  ஓலிடநன்
மதிபோல் மாமைமுக மண்டலம்    ப்குக்கநகுங்
கதியே வேற்குழவீ  நின்னைக் காதலால்   த்ழுவ
நிதியே வாராயோ கைகள்  நீளுகின்றனவே
பதினெண் கணங்கள்: 17+1

1.தேவர் (சுரர்களாகிய தமிழர்கள்), 
2.சித்தர் (சித்ததை  நிலைநிறுத்தி அட்டமா சித்திகளை அடைந்து உயிர்களைக் காப்போர்), 
3.அசுரர் (ஆரியர்கள்), 
4.தைத்தியர் (அரக்கர் எனும் சிவப்பு இந்தியர் -செம்மர்,பொன்னியர், இரணியர் எனவும் கூறப்படுவர்), 
5.கருடர், 
6.கின்னரர் ( மேற்புறம் மனித உருவமும் இடுப்பிற்கு கீழ் குதிரை வடிவமும்  கொண்ட ஆடற்கலையில் வல்லவர்கள்), 
7.நிருதர் (தமிழகத்தின் தென்மேற்கில் இருக்கும் ஆப்ரிக்க நாட்டவர். வரைமார்பர்) ,
 8.கிம்புருடர் (இமயமலைப்பகுதியில் வாழ்ந்த உயர்சக்திகொண்ட , சிங்க முகமும் மனித உடலும் கொண்டவர்கள். கிம்புருடர்கள் கின்னரர்களுடன் தொடர்புடைய இனக்குழுவினர்),
 8.காந்தருவர் (தேவர்களின் உதவியாளர்கள்), 
9.இயக்கர் (உருவமற்ற, மனிதரல்லாதவர்.. இயற்கை வளங்களைக் காப்பவர்கள்.வேடுவர்களின் மூத்தோர்), 
10.விஞ்சையர் (பறக்க வல்லவர்கள்; வித்தைகளில் வல்ல வித்யாதரர்கள்), 
11.பூதர் (மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த துணை தெய்வங்கள்; ஆடல், பாடல்களில் விருப்பமும், இசைக்கருவிகளை இசைப்பதில் தேர்ச்சி பெற்றும், சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு, அவரை விட்டுப் பிரியாது இருப்பர் பூதர்கள். சிவபெருமான் அளிக்கும் செல்வத்தை எடுத்துச் சென்று பக்தர்களுக்குத் தருபவர்கள்) , 
12.பிசாசர் (மனிதர்களில் குடி கொண்டு தங்கள் விருப்பப் படி ஆட்டிப் படைப்பவர்கள்; மனித மாமிசத்தை உண்ணும் கொடூரமான, கோபக் குணமும், வடிவமற்றவர்கள்) , 
13.அந்தரர் (இருள் துறந்து ஒளி பொருந்திய விண்ணுலகத்தில் வசிக்கும் புண்ணியர்),
14. முனிவர் (மௌனமாய் தனித்திருந்து தவநிலையில் வாழ்வோர்), 
15.உரகர் ( தெய்வீக நாகர்கள் -மேல் பாதி மனித உடல், கீழ்பாதி நாக உடல்),
 16.ஆகாயவாசியர், 
17.போக பூமியர் 
18. விண்மீன்கள் எனப்படும் 18 கணங்கள்.

பதினெட்டுக் கணங்களும் போற்றுகின்ற சேவடி (யில் உள்ள தண்டை, கிண்கிணி முதலியவை) ஒலித்திடக் களங்கமற்ற நிலவை ஒத்த நின் அழகிய முகமண்டலம் ஒளி செய்யும்படி புன்முறுவல் செய்யும் (உயிர்களுக்குப்) புகலிடமாய் உள்ளவனே! வேல் ஏந்திய குழந்தைத் திருமேனி கொண்டவனே! என் செல்வமே! உன்னைக் காதலோடு தழுவிக் கொள்ள என் கைகள் நீளுகின்றனவே. நீ வந்தருளாயா?


1
சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.
சீவி முடித்தசிகை செம்பொன் சுட்டி நன்குழைகள்
மேவும் உ றுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ !
ஏவல் கொடுத்தருள  எண்ணி என்முன் வாராயோ?
கூவை வெறுத்த  கண்கள் இச்சை கொள்ளு கின்றனவே.
சீவி முடித்த தலையில் செம்பொன்னாலான சுட்டியும், காதுகளில் நல்ல குண்டலங்களும் ஒளி செய்ய விளையாடும் வேற்குழவீ! உலகத்தைக் காண வெறுக்கும் என் கண்கள் உன்னைக் காண இச்சை கொள்ளுகின்றனவே! என்னைப் பணிகொள்ள எண்ணி என் முன் வந்தருளாயா?

2
பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.
பாவேறுஞ்  சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ !
சே ஏறுன்   பவளத் தெய்வ வாயையே  திறந்து
தூவேறு  இன்கரைகள்  இங்குச் சொல்ல வாராயோ?
கோவே! என்செவிகள்  இச்சை கொள்ளு கின்றனவே.
பாவலர் மெச்சிப் பாடும் வேற்குழவீ! மிகச் சிவந்த உனது பவளம் போன்ற தெய்வத் திருவாயைத் திறந்து தூய இனிய மொழிகளைக் கூறுதற்கு இங்கு வந்தருளாயா? என் இறைவனே! உன் மொழிகளைக் கேட்பதற்கு என் செவிகள் இச்சை கொள்ளுகின்றனவே.

3
பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

பொன்  ஆர் கண்டசரம் நன்கு பூண்ட தங்க ஒளிக்
கொன்  ஆர் வேற்குழவீ !  நல்ல கொவ்வை 
நின் இதழை 
என் ஆர் வந்தீர இங்கு நல்க வாராயோ?
உன் ஆர் உண் நிலையும் வாயும் ஊறுகின்றனவே.
பொன்னாலாகிய கண்டசரத்தை நன்கு அணிந்து பொன் ஒளி செய்யும் பெருமையுடைய வேற்குழவீ! உன்னை எண்ணுகின்ற உள்ளமும் வாயும் ஊறுகின்றனவே! என் ஆர்வம் தீரும்படி நல்ல கொவ்வைக்கனி போன்ற நினது வாயிதழை எனக்குத் தருதற்கு இங்கு வந்தருளாயா?

4
எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ
எண் ஏறும்  பல  அயில் என்ற வேல்பிடித்து   அசையும்
கண்ணே! செங்குழுவீ !  என்றன் கண்கள் நாடு  அழகே!
தண் ஏறும்  வதன  முத்தந் தாராயோ   பிறிது
நண்ணா என் உளந்தான் நின்னை நாடு கின்றதரோ
எண்ணுதற்கு அரிய வன்மையுடைய கூரிய வேலைப் பிடித்துக் கொண்டு வரும் கண்ணே! சிவந்த குழந்தைத் திருமேனியனே! எனது கண்கள் நாடும் அழகனே! வேறு எதையும் நாடாத என் உள்ளம் உன்னை நாடுகின்றதே. இனிமை நிரம்பிய உன் திருவாயால் எனக்கு முத்தம் தந்தருளாயா?

5
முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.
முத்தே! மாமணியே! முல்லை வெட்சி நன்கடம்பு
வைத்து  ஆரம் புனைந்து என் முன்னர் வாராயோ? உ ழலுஞ்
சித்து ஆர்   வேற்குழவீ ! உச்சி செவ்வன் மோந்துகொள்ள
வித்தே! என்  மூக்கில் இச்சை மீறு கின்றதரோ.
முத்தே! மாணிக்கமே! திருவிளையாடல் செய்யும் ஞான மேனியனாகிய வேற்குழவீ! யாவற்றுக்கும் மூலமானவனே! நினது உச்சியை நன்கு மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மிகுகின்றதே! முல்லை, வெட்சி, நல்ல கடம்ப மலர்களைத் தொடுத்த மாலையணிந்து என் முன்பு வந்தருளாயா?

6
ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
ஐ ஆர் நல் அரையில் பொன்  வடங்கள் ஆட உழல்
வை ஆர் வேற்குழவீ ! இங்கு வாராயோ?  கால்கள்
மை ஆர் கண்மலர்கள் இன்பு மல்க மோந்துகொள்ள
மெய்யா என் மூக்கில்   இச்சை மீறுகின்றதரோ
அழகு நிரம்பிய நல்ல இடையில் பொன் வடங்கள் ஆடும்படி விளையாடும் கூரிய வேலையுடைய குழவீ! நினது கால்களையும் மையிட்ட கண்களையும் இன்பம் பெருகும்படி மோந்து கொள்ள என் மூக்கின் இச்சை மெய்யாய்ப் பெருகுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?

பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.
பொன்போல் மேனியிலே நல்ல பூமணங்  கமழும்
இன்பே! வேற்குழவீ ! இங்கு வாராயோ? விரியா
அன்பு ஆர் புன்முறுவல் செய்யும் ஆர்வில் பல் அழகென்
துன்பு ஈர் அம்பு  எனவே  நெஞ்சம் துள்ளு கின்றதரோ.
பொன் போன்ற நினது திருமேனியிலே நல்ல மலர் மணம் கமழும் இன்பனே! வேற்குழவீ நீங்காத அன்பு விளங்கும் புன்முறுவல் செய்கின்ற விருப்பத்தால் தோன்றும் நினது பல்லழகு எனது துன்பத்தை அழிக்கின்ற அம்பாகும் என்று என் நெஞ்சம் கூத்தாடுகின்றது. நீ இங்கு வந்தருளாயா?

8
கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.
கள்ளார் செங்கரும்பே! கண்டு தேனே! இன்னமுது உண்
கிள்ளாய்! வேற்குழவீ ! அன்பர் கேளே! மாது உமையாள்
பிள்ளாய்! கண்ணி ஒன்று நல்ல பெட்பில்  நான் தருவேன்
தள்ளாதே கொளற்கு  என் முன்னர் வாராயோ தகையே.
இனிமை நிரம்பிய சிறந்த கரும்பே! கற்கண்டே! தேனே! இனிய அமுதத்தை உண்ணும் கிளிப்பிள்ளையே! வேற்குழவீ! அன்பரின் அன்பனே! உமாதேவியின் திருமகனே! நீ அணிவதற்கான நல்ல மாலை ஒன்று நான் அன்போடு தருவேன். அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ள என் முன்பு வந்தருளாயா!

9
மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.
மாண்பு ஆர் சந்தமுனி  இன்ப வாழ்வே! நின்  எழிலைக்
காண்பார் வேறு அழகு  இங்குக் காண்பார் கொல்லோ? நான்
ஊண்  பாடு அஞ்சி உனை நன்கு காண்பான் இன்றுவந்தேன்
வீண்  போகாதபடி  இங்ஙன் வாராய் வேற்குழவீ.
மாண்பு மிகுந்த சந்த முனிவராகிய அருணகிரிநாதரின் இன்ப வாழ்வே! வேற்குழவீ! நினது அழகைக் காணும் பேறுபெற்றோர் இவ்வுலகில் வேறு ஒன்றையும் அழகு என்று காண்பாரோ? காண மாட்டார். இருவினை நுகர்ச்சிக்கு அஞ்சிய நான் உன்னை நன்கு காண இன்று வந்துள்ளேன். எனது எண்ணம் வீணாகாதபடி இங்கு வந்தருள்வாயாக.

10
சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்

Sunday, March 19, 2017

ஸ்ரீ "பாம்பன் ஸ்வாமிகள்" அருளிய பகைகடிதல் விளக்கத்துடன்

 ஸ்ரீ     "பாம்பன் ஸ்வாமிகள்" அருளிய பகைகடிதல் 

பாம்பன் சுவாமிகள் பாடல் தொகுப்பில் ஆறாவது மண்டலத்தில் உள்ள “பகை கடிதல்” என்னும் இப்பதிகத்தை பக்தியுடன் உள்ளம் உருக பாட திருமயில் மீது செவ்வேட்பரமனைத் தரிசிப்பர்; பகையை வெல்வர்.”என பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது!
 "மயிலே! நீ இல்லாமல் முருகன் எங்கும் செல்ல மாட்டானாமே! சரி! உன்னையே அழைக்கிறேன்! நீ உடனே என் முருகனைக் கூட்டிக் கொண்டுவா!” என விரும்பி வேண்டிக் கேட்கும் வகையில், சந்தம் கமழத் திகழும் பதிகம் இது!

மூலப்பதிகம்:

திருவளர் சுடருருவே சிவைகர மமருருவே
அருமறை புகழுருவே யறவர்க டொழுமுருவே 
இருடபு மொளியுருவே யெனநினையெனதெதிரே 
குருகுகண் முதன்மயிலே கொணர்தியு னிறைவனையே.

மறைபுக ழிறைமுனரே மறைமுதல் பகருருவே
பொறைமலி யுலகுருவே புனநடை  தருமுருவே 
இறையிள முகவுருவே யெனநினை யெனதெதிரே 
குறைவறு திருமயிலே கொணர்தியு னிறைவனையே.

இதரர்கள் பலர்பொரவே யிவணுறை யெனதெதிரே
மதிரவி பல வெனதேர் வளர்சர ணிடையெனமா 
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே 
குதிதரு மொருமயிலே கொணர்தியு னிறைவனையே.

பவநடை மனுடர்முனே படருறு மெனதெதிரே
நவமணி நுதலணியேர் நகைபல மிடறணிமால் 
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே 
குவலயம் வருமயிலே கொணர்தியு னிறைவனையே.

அழகுறு மலர்முகனே யமரர்கள் பணிகுகனே
மழவுரு வுடையவனே மதிநனி பெரியவனே 
இழவில ரிறையவனே யெனநினை யெனதெதிரே 
குழகது மிளிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.

இணையறு மறுமுகனே யிதசசி மருமகனே
இணரணி புரள்புயனே யெனநினை யெனதெதிரே 
கணபண வரவுரமே கலைவுற வெழுதருமோர் 
குணமுறு மணிமயிலே கொணர்தியு னிறைவனையே.

எளியவ னிறைவகுகா வெனநினை யெனதெதிரே
வெளிநிகழ் திரள்களை மீன் மிளிர்சினை யெனமிடைவான் 
பலபல வெனமினுமா பலசிறை விரிதருநீள் 
குளிர்மணி விழிமயிலே கொணர்தியு னிறைவனையே.

இலகயின் மயின்முருகா வெனநினை யெனதெதிரே
பலபல களமணியே பலபல பதமணியே 
கலகல கலவெனமா கவினொடு வருமயிலே 
குலவிடு சிகைமயிலே கொணர்தியு னிறைவனையே.

இகலறு சிவகுமரா வெனநினை யெனதெதிரே
சுகமுனி வரரெழிலார் சுரர்பலர்  புகழ்செயவே 
தொகுதொகு தொகுவெனவே சுரநடமிடுமயிலே 
குகபதி யமர்மயிலே கொணர்தியு  னிறைவனையே.

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருணைய னரனெனவே யகநினை யெனதெதிரே 
மருமல ரணிபலவே மருவிடு களமயிலே 
குருபல வவிர்மயிலே கொணர்தியு னிறைவனையே.
       


                                                    விளக்கம்
நன்றி : ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி  மன்றம்

திருவளர் சுடருருவே சிவைகரம் அமருருவே
அருமறை புகழுருவே அறவர்கள் தொழுமுருவே 
இருள்தபும் ஒளியுருவே எனநினை எனதெதிரே 
குருகுகன் முதன்மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
தெய்வத்தன்மையும் அழகும் மிகுகின்ற ஒளியுருவு உடையவனே! பார்வதியின் திருக்கரத்தில் அமரும் அழகனே! அருமையான வேதங்கள் போற்றும் திருவுருவானே! தவசிகள் வணங்கும் தவமேனியனே! (அஞ்ஞான) இருளைப்போக்கும் (ஞான) ஒளி வடிவமுடையானே என்று தியானிக்கும் என் எதிரில் பறவைகட்கெல்லாம் தலையாய மயிலே! உன் நாயகனைக் கொண்டு வருவாயாக!!!!! 

விசேடம்:
 திரு - தெய்வத்தன்மை, பேரழகு முதலிய பல பொருளொரு சொல். அறவர்கள் - முனிவர்களுமாம். முருகவேளை அகத்தியர், நாரதர், பராசர புத்திரர்களான ஆறு முனிவர்களும் தொழுதருள் பெற்றனர். இருள்தபும் ஒளியுரு - புற இருள் நீக்கும் சூரியன் போலாது அக இருளையும் ஓட்டும் ஆற்றலுடைய ஒளியுருவினன் என்க. "ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி" என்பர் நக்கீரர். குருகுகள் - பறவைகள். மயில், முருகவேல் திருவடிகளைத் தாங்கும் தனிச்சிறப்பால் "குருகுகள் முதல்" எனப்பட்டது. இறைவன் - எல்லா உயிர்களிலும் தங்குபவன். மயிலிறை எனவே, மயிலுக்குத் தலைவனான செவ்வேல் என்றபடி.

மறைபுகழ் இறைமுனரே மறைமுதல் பகருருவே 
பொறைமலி யுலகுருவே புனநடை தருமுருவே 
இறையிள முக உருவே எனநினை எனதெதிரே 
குறைவறு திருமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
வேதங்களால் துதிக்கப்படும் சிவபிரான் திருமுன்பிருந்தே மூல மந்திரப் பொருள் விரித்த குரு வடிவே!! பொறுமை நிறைந்த உலக உருவானவனே! வள்ளியம்மை இருந்த புனத்தில் நடந்த அழகனே! பெருமை மிக்க இளமையான திருமுகமுடையவனே என்று தியானிக்கும் என் எதிரில் எக்குறையினையும் நீக்கும் அழகிய மயிலே! உனது இறைவனைக் கொண்டு வருவாயாக!!!!!

இதரர்கள் பலர்பொரவே இவணுறை எனதெதிரே
மதிரவி பல வென தேர் வளர் சரணிடை எனமா 
சதுரொடு வருமயிலே தடவரை யசைவுறவே 
குதிதரு மொரு மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
பல கீழ்மக்கள் போரிடும்படி இவ்வுலகில் வாழும் எனக்கெதிரில், புகழப்படும் மிகப்பல் சூரியர் (உதயமோ) என என்னும்படி ஒளிவளரும் திருவடியைத் தாங்கும் இடமென்ன (ஊர்தி என) மிகுந்த திறமோடு வரும் மயிலே! பெரிய மலைகள் அதிரும்படி குதித்துவரும் ஒப்பற்ற மயிலே, உனது பெருமானைக் கொண்டு வந்து அருள்க!!!!!

பவநடை மனுடர்முனே படருறும் எனதெதிரே 
நவமணி நுதல் அணியேர் நகைபல மிடர் அணிமால் 
சிவணிய திருமயிலே திடனொடு நொடிவலமே 
குவலயம் வருமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
பிறவிக்கேதுவான பாவநெறியொழுகும் மனிதர் முன்னே, இன்புறும் என் எதிரில் நவரத்தினம் பதித்த அணியை நெற்றியிலும், அழகிய வேறு அணிகளைக் கழுத்திலும், அணிந்த பெருமை பொருந்திய திருமயிலே! ஆற்றலோடு உலகத்தையே ஒரு நொடியில் வலமாக வரும் மயிலே! உன் தலைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

அழகுறு மலர் முகனே அமரர்கள்பணி குகனே 
மழவுறு உடையவனே மதிநநி பெரியவனே 
இழவிலர் இறையவனே எனநினை எனதெதிரே 
குழகதுமிளிர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
அழகிய மலர்ச்சியுள்ள முகமுடையவனே!தேவர்கள் வணங்கும் குகப்பெருமானே! நீங்கா இளமைத் திருமேனியனே! எல்லோராலும் மதிக்கப்படும் மிகப் பெரிய அறிஞனே! மரணமிலார் (ஞானியர்) தலைவனே! என்று தியானிக்கும் என் முன்னே இளமை விளங்க நிற்கும் மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்து அருள்க!!!!!

இணையறும் அறுமுகனே இதசசி மருமகனே
இணரணி புரள்புயனே எனநினை எனதெதிரே 
கணபண வரவுரமே கலைவுற எழுதருமோர் 
குணமுறு மணிமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
மற்றொப்பாரில்லாத அறுமுகனே! இந்திராணி அன்பு கொள்ளும் மருமகனே! கொத்தான மலர் மாலை புரளும் திருத்தோளனே என்று தியானிக்கும் என் எதிரில் கூட்டமான படங்களையுடைய (சேடன்) பாம்பின் வன்மை குன்றும்படி எழும் ஒப்பற்ற (அருட்) குணமுடைய மரகத மயிலே உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

எளிய என் இறைவ குகா எனநினை எனதெதிரே 
வெளிநிகழ் திரள்களைமீன் மிளிர்சினையென மிடைவான் 
பளபள எனமினுமா பலசிறை விரிதருநீள் 
குளிர்மணி விழிமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
ஏழையாகிய அடியேனது இறைவா! குகா! என்று தியானிக்கும் என் எதிரில் வானவெளியில் சஞ்சரிக்கும் கூட்டங்களாகிய விண்மீன்களை, அழகிய முட்டைகளைப் போல ஒடுங்கிப் பளபளவென்று மின்னுமாறு பல இறக்கையை (தோகையை) விரிக்கும் நீண்ட குளிர்ந்த மணிபோலும் விழிபடைத்த மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

இலகயில் மயில்முருகா எனநினை எனதெதிரே 
பலபல களமணியே பலபல பதமணியே 
கலகல கல எனமா கவினொடுவருமயிலே 
குலவிடுசிகைமயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
மேலே விளங்கு மயூர (வாகன) முருக எனத் தியானிக்கும் என் எதிரில் கழுத்தணிகள் பலவும், கலகலவென ஒலிக்கும்படி அழகாய் வரும் மயிலே! விளங்கும் கொண்டையுள்ள மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

இகலறு சிவகுமரா எனநினை எனதெதிரே 
சுகமுனிவரர் எழிலார் சுரர்பலர் புகழ் செயவே 
தொகுதொகு தொகு எனவே சுரநட மிடுமயிலே 
குகபதி அமர் மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
சிவகுமார! என் பகையை ஒழித்தருள்க என்று தியானிக்கும் என் எதிரில் பேரின்ப நிலை கைவந்த முனிவர்களும் அழகிய தேவர்கள் பலரும் துதிக்கவும் தொகுதொகு என்ற தாளத்துடன் தேவ நடனம் செய்யும் மயிலே! குகப்பரமன் வீற்றிருக்கும் மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!!

கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே 
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே 
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே 
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே. 

விளக்கம்:
அருள்மழை பொழியும் கருணை மேகமே! கும்பமுனி (அகத்தியர்) வணங்கும் முதல்வனே! அருணகிரி (யை ஆண்டருள்) அறுமுகச் சிவனே என்றெல்லாம் உள்ளத்தில் தியானிக்கும் என் எதிரில் வாசமிக்க மாலை அணிந்த கழுத்தையுடைய மயிலே! மேன்மைகள் பல விளங்கு மயிலே! உன் இறைவனைக் கொண்டு வந்தருள்வாயாக!!!!! 

விசேடம்:
பாம்பனடிகள் பிரப்பன் வலசைப்பெருந்தலத்தில் 35 நாட்கள் நிட்டை கூடியபோது காளைக் குமரேசன் அவர் திருமுன் அகத்தியர், அருணகிரி என்ற இரு முனிவர்களுடன் காட்சி அளித்தான். இப்பாட்டில் அந்த இரு முனிவர்களையும் ஒருசேர அமைத்திருப்பது விசேடமாம். சுவாமிகள் பாடல்கள் சிலவற்றில் தான் இரு முனிவர் திருநாமங்களும் ஒரே பாட்டில் வரும். எனவே, இப்பாடலில் தாம் பெற்ற உபதேச நினைவும் நிழலாடக் காணலாம். இதில் பிணி நீக்கும் மருத்துவக் கலைஞர் அகத்தியரும் அருள் நோக்குக்கு உதவும் அருணகிரியாரும் பகை நீக்க அருளும் மயூரநாதனும் வருவது உணர்ந்து மகிழத்தக்கது.

For english verses and explanation  http://www.kanchiforum.org/forum/viewtopic.php?t=63&postdays=0&postorder=.&start=3100

Wednesday, June 8, 2016

விரைவில் திருமணம் நிகழ- திருப்புகழ் விறன்மாறன் ஐந்து!

                                                               ஓம்

       இன்று youtube -ல் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியின் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்தபடி கந்த சஷ்டியன்று  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அடியார்களுடன் செய்த திருப்புகழ் வேள்வி கண்டேன். விறல்மாறன் ஐந்தில் இருந்து கடைசி பாடலை அற்புதமாக பாடி செய்த யாகத்தின் சிறிய video. இனிமையான ராகத்தினால் உடனே மனதில் இருத்திக் கொள்ள  முடிகிறது. அதன்  video link


  https://youtu.be/8rTJY4LNwps

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு! இனி பாடல்!

விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல ஒன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் அறிந்த அதிதீரா

அறிவால் அறிந்துஉன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!

பொருள்:

[பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த தாருகவனத்தின் முனிவர்கூட்டச் செருக்கினை அடக்க சிவபெருமானும் அழகியவுருவில் அவர்முன் நடக்க,
 மையலில் மயங்கிய முனிவர் பெண்டிர் அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை
அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த பிரமனை அழைத்து மூலப்பொருளாம் பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன் தலையினில் குட்டி சிறையினில் தள்ளி சிருட்டித்தொழிலைத் தானே செய்து க்ந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில், கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திருக்கும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து
கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி
ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற, ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி மூலப்பொருளின் பொருளுரை கேட்டார். ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்    சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல் எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,
"மதிபாளா"   - ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன் சூரன் என்பான் சிவனை வணங்கிப் பலவரம் பெற்று தம்பியர் துணையுடன் தேவர் மானிடர் முனிவரை வருத்தி ஆட்சி செய்யும் வேளைதன்னில், முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில் மாமரமாகி சூரன் நின்றனன்.மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து, ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்கும் "அதிதீரா" -வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும் பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும். இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி. எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன் முனிவருமிவனது கணை பிழையாரே. தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார் பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்! அவனே அழகிய மன்மதன் என்பான்!
அவனது கையில் வில்லொன்றுண்டு அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!


இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும் வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால் வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற'
வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர் மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின் ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ! பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா! ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில் நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

அலைவாய்- திருச்செந்தூர்.

பொருளுக்கு நன்றி- VSK.