Moving Image

Thursday, September 24, 2026

ஒளியுடல் கரைத்த வள்ளலார்

                           திரு அருட்பிரகாச வள்ளலார் 







திரு அருட்பிரகாச வள்ளலார் 5-10-1823 ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி 21 ஆம் நாள் இராமையா- சின்னம்மை எனும் பெற்றோருக்கு  இராமலிங்கமாக அவதரித்தார். சிறு பருவத்திலிருந்தே இராமலிங்கம் இறைதேடலில்  இருந்தார். கல்லாமலேயே அவருக்கு தமிழில் சொற்பொழிவுத் திறனும் புலமையும், பிறமொழிப் புலமையும் மிகுதியாக இருந்தது. கல்வியும் கேள்வியும் இறைவனிடம் பெற்றதே அன்றி வேறு எவரிடத்தும் பெறவில்லை என திருவருட்பாவில் கூறியிருக்கிறார். 


கண்ணாடியில் முருகப்பெருமானின் திருக்காட்சி, பசித்தபோது புசிக்கச்செய்த வடிவுடையம்மையின் விருந்தோம்பலை இருமுறை பெற்றும், தண்ணீரில் விளக்கெரித்தல், இரும்பை தங்கமாக்குதல், வறண்ட பூமிக்கு மழை வருவித்தல், நவகண்ட யோகம் என பல அற்புதங்களை செய்வித்தார். 

இறுதியில் மரணம் என்பது நோய் அதனை மனிதரால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணையுடன் வென்று இறவா உடல் பெறலாம் என கண்டறிந்து அதற்கு உதவும் சன்மார்க்க நெறியைத் தோற்றுவித்தார் .  (vallarspace.com) 


சுத்த தேகம் - Perfect Body

ஜீவகாருண்யம், பக்தி, ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும் அவருடைய தூல தேகம் சுத்த தேகம் - Perfect Body ஆயிற்று. சுத்த தேகத்தினால் 

12 வயது தோற்றம், பொன்வண்ணம், 

நரை, திரை, பிணி, மூப்பு, மல, ஜலம், வியர்வை, ஆகாரம், சாயைல்லாமை, 

ரோம வளர்ச்சி, தாழ்ச்சி இல்லாமை பெற்றார். 

இவ்வுடல் புகைப்படத்திலும் விழாது. 

இந்நிலையால் தோன்றி மறைய, இறந்தோரை எழுப்ப, நினைத்த இடம் செல்லும் சித்துக்கள் கிடைக்கப்பெற்றார். 


பிரணவ தேகம் - Body of Grace

அடுத்த நிலையாக பிரணவ தேகத்தினை (Body of Grace) அடைந்தார். 5 முதல் 8 வயது குழந்தை உருவாக மாறி தொட்டுப் பார்க்க இயலாத அருவுருவைப் பெற்றார். 

சுடர் போல தோன்றுமடா தூல தேகம் எனும் சித்தர் வாக்கு இதனை நிரூபிக்கின்றது. சித்துக்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். 


ஞான தேகம் -Body of Bliss

இறுதியாக ஞான தேகத்தினைப்  (Body of Bliss) பெற்றார். ஞான தேகம் என்றால் 

தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் தேகம் என்பார் வள்ளலார்.


 எனினும் அவர் எல்லோர் கண்ணுக்கும் தெரியும்படி தூரத்திலும் வாழவே செய்தார். இறவா அழியா தூல சுத்த தேகமும், சூட்சும பிரணவ தேகமும், காரண ஞான தேகமும் ஒருங்கே இணையப் பெற்ற பெரும் பேற்றை அடைந்தார். 


அவரது தூல உடல் பொன்னொளி நிரம்பி, அமுதம் ததும்பி, உடல் தாதுக்கள் எல்லாம் தெய்வீக மாறுதல் பெற்று, மரணம் இல்லாத தன்மை அடைந்தது. எலும்பும் தசையும் நெகிழ்ந்து, ரத்தம் இளகி, மூளை விரிந்து, சுக்கிலம் ஒரு துளியாக உறைந்து நிழல் இல்லா பொன்னுடல் பெற்றார். 


இத்தகைய ஞான உடலானது தன் அருகில் வரும் வேறு உடல்களை  தூய்மையுறுத்தி, உருமாற்றத்திற்கும் துணை செய்யும் என அறியலாம். 


 வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலகின் பொருட்டு கொண்டு வரவும், தாம் வாழ்ந்த இடத்தில் நிலை நிறுத்தவும், தம் சிறப்பான வாழ்வால் ஏற்பட்ட திவ்ய சக்திகள் ஊன்றி நிலை பெறவும், எல்லோர் உடம்பிலும் புகுந்து கொள்ளவும் தம் உடலை 30-1-1874 அன்று - ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணி அளவில் தன் சித்திவளாக மாளிகையின் அறையில் புகுந்து திருக்காப்பிட்டுக் கொண்டார் அடிகளாரின் ஆணையால் அறைக்கதவை சில நாட்கள் திறவாமல் சபை மக்கள் இருந்தனர். ஆனால் அரசாங்க ஆணையால் கதவை திறக்கும்படி ஆயிற்று. 


வள்ளலார் கூற்றுப்படியே “பத்திலிருந்து பதினைந்து தினங்கள் உள்ளே இருக்கப் போகிறேன்.  அவ நம்பிக்கை அடையாதீர்கள். அப்படியும் அறையினுள் பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறும் வீடாக தான்  இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்; என்னைக் காட்டிக் கொடார்” எனும் கூற்றுப்படி வள்ளலார் மாயமாக மறைந்தார். 


உள்ளே சென்ற வள்ளலாருக்கு என்ன ஆயிற்று? 

ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள திரு கங்காதரன் அவர்கள் வழக்கமாக அதிகாலை இரண்டிலிருந்து மூன்று மணி வரை தியானிப்பார். 


*


அவ்வாறு 14-1-78 தை மாதம் முதல் நாள் தியானத்தில் இருக்கும்பொழுது சில தொடர்ச்சியான திவ்ய காட்சிகள் கிடைக்கப்பெற்றார். அக்காட்சி என்னவெனில் வள்ளலார் இறவாத்தன்மை அடைந்த தன் பொன் உடலை உலக நன்மையின் பொருட்டு கரைத்துக் கொண்ட தியாக காட்சியே ஆகும். திரு கங்காதரரின் தியான அனுபவத்தை காண்போம். 


என் தியானத்தின் முதல் காட்சியாக சொல்லொணாத பேரமைதியும்,  பரசாந்த் மௌனமும் எங்கும் நிறைந்திருக்க கண்டேன். அத்தகைய அருட்பேர் அமைதியிலும் அறிய இயலா தெய்வீக ஒலியைக் கேட்க முடிந்தது. இத்துடன் இக்காட்சி முடிந்தது. 


பின்னர் எளிய அழகிய சிறு கிராமம் ஒன்று தென்பட்டது. அங்கு

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சாந்தித்தியமாக சத்திய ஞான ஜோதியுடனும் அற்புதமான நறுமணத்துடனும் வீற்றிருக்க கண்டேன். அவ்விடத்தின் தெய்வீகத்தன்மை இவ்வாறு பொலிவு பெற்றதைக் கண்டு என் இதயம் அருட்பெரும் கருணைக்கு ஏங்கலாயிற்று. 


 கிராமத்தின் நடுவில் தூய எளிய சிறு வீடு ஒன்று கண்டேன். அருட்பெரும் கருணை அவ் வீட்டிலிருந்து எங்கும் வியாபித்துக் கொண்டிருந்தது கருணை நிறைந்த அடிகளார் அவ்வீட்டினுள் நுழைந்தார் அவர் முகம் பரமானந்தத்துடனும் மௌனத்துடனும் அமைதியுடனும் காணப்பட்டது கருணையே உருவாக காணப்பட்ட அவரது தூல பேருடன் சத்ய ஞான பேரறிவு என்னும் தவ ஒளியுடனும் சுத்த சிவமாகவும் காணப்பட்டது. 


அவர் உடல் முழுவதுமிருந்து அருட்பெரும் கருணை பிரவாகமாய் எங்கும் பரவிக் கொண்டிருந்தது. பொன் மொழியுடன் அவர் உடல் மிளிர்ந்து கொண்டிருந்தது. அவர் தாழ்வாரத்தில் இருந்த விளக்கின் திரியை தீண்டி விட அது பிரகாசமாய் எறியலாயிற்று பின் தன் அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார். 


வள்ளலார் மனக்கட்டையின் மீது விழித்திருந்த வெள்ளை துணியில் அமர்ந்து தியானிக்கலானார். அவரது தோற்றம் சத்ய ஞானக் குன்று போலவும், சத்திய ஞானப்பெரும் ஜோதி போலவும் காணப்பட்டது சத்திய ஜோதிப் பிழம்பாகவும் தனித்து அமைதியுடனும், தவ பிழம்பாகவும் விளங்கினார். இறைவனின் உயர் உருவாகத் திகழ்ந்தார். அவரது தூய ஒளி உடலில் இருந்து ஒளி வெள்ளமாக திக்கெங்கிலும் பரவிக் கொண்டிருந்தது. 


தனிப் பெரும் கருணையும் அருட்பேரருளும், கருணை ஒளியும் மறைப்பொருளான சத்தியத்தின் வெளிப்பாடே. இப்பேருண்மைகளே இப்பௌதீக உடலை இறவா பேரின்ப, பேரிளமை, பெருங்கருணையும் கொண்ட சாகா உடல் எடுக்கக் காரணமானவை. இவ்வாறு இத்தகைய தெய்வீக உடல் பெற ஒருவர் பேரருட்கடலின் ஆழம் வரை சென்று அக்கருணை ஒளியுடனே ஒன்றி வாழ்ந்து அதுவே தன் இயல்பாய் பெற்றால் மட்டுமே இயலும். 


வள்ளலார் உடலில் இருந்து வெளிப்பட்ட ஒளிவெள்ளம் மிக மிகப் பிரகாசமாக இருந்தது. அவ்வொளிப் பிரவாகத்தை பார்க்கவும் உள்வாங்கி கிரகிக்கவும் தனிப் பயிற்சி பெற்றிருந்தால் மட்டுமே இயலும். அவ்வொளிப்பிரவாகத்தைக் கண்டு என் உடல் முழுமையும் ஆனந்தமும் முழுமையும் அடைந்து சிலிர்த்தது. 


சிறிது நேரத்திற்கு பின் வள்ளலார் எழுந்து சென்று வானத்தை பார்த்தார். பௌர்ணமி நிலா தன் கிரணங்களை புவியின் மீது பரப்பிக் கொண்டிருந்தது நிலவிலிருந்து சற்று தொலைவில் மிகப் பிரகாசமான திடமான ஒளி தெரிந்தது. அது ஒரு பிரகாசமாக சுடர்விடும் நட்சத்திரம் ஆகும். அடிகளார் சற்று நேரம் அதனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் அவர் இதயம் பேரானந்தம் நிறைந்து, முகமும் ஆனந்தமாக காணப்பட்டது. பின் சற்று நேரத்தில் மறுபடியும் பலகையில் அமர்ந்து அதீத தியானத்தில் ஈடுபட்டார். 


இவ்வாறு அவர் தியானத்தில் ஒன்றுவிட்ட நிலையில் அவர் இதயத்தில் இருந்து மிகப் பிரகாசமாய் ஒளிரும் சத்யா அருட்பெரும் கருணை ஜோதி திசை எங்கும் பரவியது தனித்தன்மையான எரித்தலால் அவர் தூல உடல் மேல்நோக்கி இருதயத்திலிருந்து தலை வரை ஒரு நத்தையின் வேகத்தில் ஊதுபத்தி எரிவது போல எரிய ஆரம்பித்தது. ஆனால் ஊதுபத்தி உள் சூட்டினால் கீழ்நோக்கி எரிந்து சாம்பலாகும் அடிகளார் உடலோ மேல்நோக்கி இருந்தாலும் சாம்பல் தட்டாமல் இருந்தது. 


மேல்புறமாக அவரது பிரகாசமான உடல் முழுவதும் எரிந்த பின் அவ்விடத்தில் தூய வெண்மையான பொருள் பிரகாசமாக முழுமையான ஞான உணர்வுடனும் இருந்தது. எரிந்த பகுதியில் உள்ள உடல் அமைப்புகள் சிதையாமல் அப்படியே இருந்தது அவரது எரிந்த முடியும் கூட ஒளிரும் வெண்மையான முடியாக இருந்தது. பின் அருட்பெரும் கருணையின் வெம்மையானது கீழ் நோக்கி தூல உடலை எரிக்கலாயிற்று. அவரது முழு உடலும் இவ்வாறு எரிந்தபின் அடிகளாரின் உடல் முழுமையும் தூய வெண் பொருளாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவரது ரத்தமும் கூட வெண்மையாக ஒளிவிடும் பொருளாக மாறிவிட்டது. 


அவ் வெண்மையானது அடிகளாரின் தூல உடலில் உள்ள அனைத்து அணுக்களையும் அதன் தன்மையினையும் உள்ளும் புறமும் அப்படியே வைத்திருந்தது அவரது உடல்வாகு சுருங்காமல் இருந்தது. 


அடிகளாரின் உயிருள்ள பௌதீக உடல் எரியும் பொழுது என் கண்ணுக்குத் தெரிந்து நெருப்போ தென்படவோ அல்லது அதன் வெம்மையோ தெரியவில்லை. கருகும் புகையோ, திசுக்கள் எரியும் நாற்றமோ, எலும்புகளின் சடசடப்போ கேட்கவில்லை ஆனால் ஒரு இனிய நறுமணம் அவர் உடல் எரிய ஆரம்பித்த முதல் எங்கும் பறவை கொண்டிருந்தது. என்னுள் நிலைத்து அமைதியும் சாந்தமும் நிறைந்த பேரானந்தமும் குடி கொண்டது. 


இப்போது இரண்டாம் கட்ட எரிதல் கரைத்தல் நிகழத்  துவங்கியது


தனித்தன்மை உடைய அருட்பெரு கருணை என்னும் சத்திய ஜோதியின் வெம்மை அடிகளாரின் ஒளிரும் வெண்மையான உடலை கீழ்நோக்கி எரிக்க ஆரம்பித்தது. அவ்வாறு எரித்தலால் வெண்மையான உடலானது ஞான உணர்வுடன் கூடிய மிக நுண்ணிய அணுவிற்கு அணுவான பருப்பொருளாய்க் கரைந்து, இப் பிரபஞ்சம் முழுக்க ஊடுருவி பரவி அப்பாலுள்ள தூய ஞான  உலகங்களிலும் ஊடுருவியது. 


அத்துய நுண்ணிய வெண்மையான பருப்பொருள்கள் தன் ஒளிரும் திறத்தால் பூவுலகில் அனைத்து இடங்களிலும் நுழைந்து பரவியது. இவ்வாறு அடிகளார் கரைத்த உடலின் அணுவிலும் நுண்ணிய பொருட்களை புவியின் பஞ்சபூதங்களில் பதித்தார். பூமிக்கு ஆதாரமான கருவெளியிலும் மரண தேவனின் கோட்டை தளமான பேர் இருட்டு பெரு நிலத்திலும் கூட நிரந்தரமாகப் பதித்து விட்டார். 


இவ்வாறு பிரபஞ்சம் முழுக்க பரவிய பின் காட்சிகள் கண்ணில் இருந்து மறைந்தன. ஆனால் எங்கும் இனிமையும் மென்மையும் நிறைந்த கற்பூர மணம் பரவி பேரானந்தத்தை என் இதயம் முழுக்க நிறைத்தது. 


பின் அடிகளாரின் அண்டமெங்கும் பரவிய பொன்னொளிர் நித்திய வடிவத்தைக் காணும் அரியபேறு கிட்டியது .அவரது பொன்னொளிர் உடல் விஸ்வக் பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்க கண்டேன் இவ்வுருவம் மறைந்தது. 


ஒளியை விட வேகமாக பரவும் பொன் ஒளி கொண்ட சத்ய ஞானமும் பேரருளும் திசையுங்கும் ஊடுருவி உலகின் மூலை முடுக்கு பூமிக்கு ஆதாரமான கரு வெளியிலும் ஜடப் பொருட்களிலும் பரவியது. எவ்வெப் பொருள்களில் எல்லாம் பொன்னொளி  படர்ந்ததோ அவையும் பொன் பொருளாய் மாறின. அப்பொன் ஒளி என் முழு ஆதாரங்களிலும் என் தூல உடல் முழுக்கவும் நிறைந்தது. என் உடல் முழுவதும் உள்ள அணுக்கள் அனைத்தும் நெகிழ்ந்து சுகானுபவத்தைப் பெற்றது. 


இவ்வகை திவ்ய காட்சிகளாலும் உணர்வுகளாகும் பரவசமாகவும் பேரானந்தத்திலும் லயித்திருந்ததால் இராமலிங்க அடிகளார் உரைத்த சில கருணை வார்த்தைகளை கேட்க இயலவில்லை.


மேலே விவரித்த காட்சி முடிய ஒரு மணி நேரம் ஆயிற்று. 


நாம் கண்ணால் காணும் ஒளியே எங்கும் வியாபித்திருக்கும் சத்திய ஞான அருட்பேரருருள் ஜோதியாகும். இச்சோதியே அனைத்து ஒளிகளுக்கும் காரணம். கற்பூரம் திடமான ஒளி வடிவமே. . 


அடிகளாரின் ஆன்மா அனைத்து பொருட்களிலும் பிரிக்க இயலா நிலையில் பரவி உள்ளது. தன் தேகத்தினைக் கரைத்து மறைந்ததால் பௌதீக சூழலில் பொன்மயமாகத் தங்கி உள்ளார் எனத் தெளியலாம். அனைத்து தத்துவங்களிலும் நிரந்தரத் தன்மை அடைந்து, கீழ் மேல் உலகங்களிலும் இருள் வெளி, ஒளி வெளிகளிலும் அவற்றினைக் கடந்தும் தெய்வீக பொன் ஒளி பெற்று நிரந்தரமாக அகண்டமாக உள்ளார். அப்பொன்னொளிர் கருணை ஜோதி மனிதரைத் தூய்மைப்படுத்தி தூல உடலை இறவா சத்ய ஞான உடலாக மாற்றும். 


இவ்வாறு தெய்வீகத்தை கண்டு அறிவதால் மட்டுமே உலக வாழ்வில் நாம் பரிணமிக்க முடியும். அருட்பெருஞ்ஜோதியால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டு 

  • நம்மையெல்லாம் தூய்மைப்படுத்த, 

  • மரணமில்லா பெருவாழ்வு அளிக்க 

  • நம் தூல உடல் தெய்வீக இளமை பெற 

  • முதியவர்களையும் இளமைக்குத் திருப்ப 

  • இறந்தவர்களையும் தூல உடலுடன் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்ப 

  • எல்லோரும் அறியும்படி ஆண்டவருடன் இதுபோன்ற சித்துக்கள் வெளிப்படையாகச் செய்து வீதியிலே விளையாடிட 


 விழைந்தார். இதற்கெல்லாம் அடிப்படைக் காரணமான அருட்பெருஞ்ஜோதியை உலகலாம் களிப்படையும்படி வருவிக்கவும், வெளிப்படுத்தி நிலைநாட்டவும், அவ்வருட்பெருஞ் ஜோதி தழைத்து ஓங்கிடவும்  தம்மை ஒரு கருவியாகக் கருதி தமக்குக் கிடைத்த அருட்பெரும் பேறான அழியா உடலைத் தியாகம் செய்து அர்ப்பணித்துக் கொண்டார். மேலும் தாமே எல்லோர் உடலிலும் புகுந்து கொள்ள திருவுளம் கொண்டார். 


இராமலிங்க அடிகளாரின் இத்தியாகச் செயலினை உணர்ந்து அவர் வாழ்ந்து காட்டிய நெறிமுறையில் ஜீவகாருண்யம், சத்ய மெய் அறிவு, தெளிந்த ஞானம் போன்ற குணங்களைப் பெற்று இறவாப் பொன்னொளிர் உடல் பெற முயல்வோம். 

https://www.auro-ma-ramalingam.org/ramalingam-life/ 


அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி!