ஆறுமுகத்தம்பிரான் பற்றி அறிய!

Wednesday, June 8, 2016

விரைவில் திருமணம் நிகழ- திருப்புகழ் விறன்மாறன் ஐந்து!

                                                               ஓம்

       இன்று youtube -ல் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியின் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்தபடி கந்த சஷ்டியன்று  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அடியார்களுடன் செய்த திருப்புகழ் வேள்வி கண்டேன். விறல்மாறன் ஐந்தில் இருந்து கடைசி பாடலை அற்புதமாக பாடி செய்த யாகத்தின் சிறிய video. இனிமையான ராகத்தினால் உடனே மனதில் இருத்திக் கொள்ள  முடிகிறது. அதன்  video link


  https://youtu.be/8rTJY4LNwps

இதை தினமும் 6 முறை சொல்லிவர, திருமணம் ஆகாதவர்க்கு விரைவில் திருமணம் நிகழும்... ! இது வாரியார் வாக்கு! இனி பாடல்!

விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல ஒன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த மதிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் அறிந்த அதிதீரா

அறிவால் அறிந்துஉன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!

பொருள்:

[பின்பாதி பார்த்து, பிறகு முன்பாதி!]

"மறிமானுகந்த இறையோன்"

தவங்கள் செய்து வலிமையடைந்து பணிவினை மறந்து தருக்குடன் அலைந்த தாருகவனத்தின் முனிவர்கூட்டச் செருக்கினை அடக்க சிவபெருமானும் அழகியவுருவில் அவர்முன் நடக்க,
 மையலில் மயங்கிய முனிவர் பெண்டிர் அழகிய தமிழ்மகன் பின்னே நடக்க ஆத்திரமுற்ற முனிவர் கூட்டம்
அழகனை அழிக்க யாகங்கள் செய்ய
அதனில் கிளம்பிய சிறுமான் வடிவை
அம்பல வாணன் மீதே ஏவ
அன்புடன் சிரித்து அப்புள்ளிமானை
தன்னிரு விரலால் தயவுடன் எடுத்து
கரங்களில் சூடிய கயிலைப் பெம்மான்

"மகிழ்ந்து வழிபாடு தந்த"

செருக்கினால் குமரனைப் பணியாதொழித்த பிரமனை அழைத்து மூலப்பொருளாம் பிரணவத்தொலியின் பொருள்தனைக் கேட்டு
அதனை அறியா திகைத்த நான்முகன் தலையினில் குட்டி சிறையினில் தள்ளி சிருட்டித்தொழிலைத் தானே செய்து க்ந்தவெற்பினில் கம்பீரமாக
கந்தக்கடவுளும் அமர்ந்திட்ட வேளையில், கண்நுதற்கடவுள் குமரனை அழைத்து பிரமனைச் சிறைவிடப் பரிவுடன் சொல்ல,
ஐயனின் சொல்லை மகிழ்வுடன் ஏற்று

பிரமனை விடுத்து, புத்திகள் சொல்லி
தந்தையுடனே தனித்திருக்கும் காலை,
பிரணவப்பொருளைத் தனக்கும் சொல்ல
அப்பனும் வேண்டிட சுப்பனும் மிடுக்காய்
இடம்,பொருள், ஏவல் அறிந்து
கேட்டலும் சொல்லலும் நிகழ்ந்திடல் வேண்டும்
எனவே உரைக்க, அதனின் தத்துவம்,
சீடன் பணிவின் திறனை இந்த
உலகுக்குணர்த்த, அருட்பெரும்ஜோதி
தணிகை சென்று கண்களை மூடி
ஒரு கணப்பொழுது தவமுமியற்ற
[தணிகை மலைக்கு இதனால் "கணிக வெற்பு" என்னும் பெயரும் இதனால் வந்தது!]
சுப்பிரமணியன் அவர்முன் தோன்ற, ஆலவாய் அண்ணல் வடதிசை நின்று
குருவின் முன்னே பணிவுடன் வணங்கி மூலப்பொருளின் பொருளுரை கேட்டார். ஐம்முகக்கடவுள் அறுமுகக்கடவுளின்    சீடனாய் இருந்து குருவிடம் கேட்டல் எப்படி என்பதைப் பாருக்குணர்த்திய,
"மதிபாளா"   - ஞான வடிவினரே!

"மலை மாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேல் எறிந்த"

கெடுமனங்கொண்ட கொடுங்கோலரக்கன் சூரன் என்பான் சிவனை வணங்கிப் பலவரம் பெற்று தம்பியர் துணையுடன் தேவர் மானிடர் முனிவரை வருத்தி ஆட்சி செய்யும் வேளைதன்னில், முனிவரும் தேவரும் இறைவனை துதிக்க ஐயனும் அவர்மேல் கருணை கொண்டு
நெற்றிக்கண்ணில் தீப்பொறி கிளப்பி ஆறுமுகனாம் ஓருரு உதித்தனன்!

சக்திவேற் படையைத் தாயவள் அளிக்க அதனைக் கொண்டு கிரௌஞ்சமலை பிளந்து தம்பியரைப் போர்க்களத்தில் வென்று
சூரனைப் போரில் பொருதிய வேளை அண்டரும் விண்டரும் நடுங்கிடும் வடிவில் மாமரமாகி சூரன் நின்றனன்.மாமர அசைவினில் அண்டம் நடுங்க
அதனுடன் சேர்ந்து அகிலமும் ஒடுங்க அதனைக் கண்ட செந்தில்வேலோன்
வேற்படைவிடுத்து 'உடலைப் பிளந்து வருகுதி!' என்று ஆணை பிறப்ப,

சங்கார வேலும் காற்றினைக் கிழித்து, ஒளியினைக் கிழித்து, விண்ணினைக் கிழித்து தீச்சுடர் பரப்பி நிலத்தில் நிமிர்ந்த மராமரம் தன்னை கூறாய்ப் பிளக்கும் "அதிதீரா" -வீரச்செயல் புரிந்திட்ட மாவீரனே!

"அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் களைவோனே"

பாசம் என்னும் ஒருபேய் வாட்டும் பசுவெனும் மறுபேய் இறைவனை மறைக்கும். இவ்விரு மாயை இரண்டையும் ஒழித்து மெய்யறிவாலே இறையை உணர்ந்து

நீயே சரணம் எனும் நினைவாலே
கந்தனின் திருத்தாள் மலரடி பணிந்து
வேண்டும் அன்பர்கள் வாழ்வினில் தொடரும்
இடர்களை நொடியில் அகற்றிடும் தலைவா!

"அழகான செம்பொன் மயில் மேல் அமர்ந்து
அலைவாய் உகந்த பெருமாளே!"

அழகே உருவாய் செம்பொன் நிறமாய்
திகழும் மயிலின் மேலே அமர்ந்து
செந்தூர் என்னும் சீரலைவாயில்
மகிழ்வுடன் அருளும் பெருமைக்குரியோனே!

"விறல்மாரன் ஐந்து மலர் வாளி சிந்த"

இவனது கணையால் மயங்குவர் கோடி. எவரையும் வீழ்த்திடும் காமக்கணையோன் முனிவருமிவனது கணை பிழையாரே. தேவரும் கெட்டே மதியழிந்தொழிந்தார் பிரமனும் மாலுமே தப்பியதில்லை
எனவே இவனே விறல்மாரனாவான்! அவனே அழகிய மன்மதன் என்பான்!
அவனது கையில் வில்லொன்றுண்டு அவன் தொடு கணையோ ஓரைந்தாகும்!

தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!


இவ்வைந்து கணைகளும் ஒருங்கே செலுத்தி மாறன் கணைகள் என்னை வருத்த,

"மிகவானில் இந்து வெயில் காய"
[இதனை "வானில் இந்து வெயில் மிக காய" எனப் படிக்கவும்]

சந்திரன் கணைகள் காதலைக் கூட்டும் வானில் வீசும் சந்திரக் கணைகள்
பகலில் கொளுத்திடும் வெயில் போல் காய்ந்திட மிகவே துன்பம் காதலில் வருத்த,

"மித வாடை வந்து தழல் போல ஒன்ற"

குளிரும் கிரணம் சுடுவது என்றால் வீசும் தென்றலும் வெந்திடுமன்றோ!
மெல்லிய தென்றல் வீசுதல் கூட நெருப்பினைப் போலே சுடுவது போல,

"விலைமாதர் தந்தம் வசை கூற'
வினைவசம் தம்மை இழந்திட்ட மகளிர் மனம்போன வண்ணம் சுடுமொழி கூறி வதை செய்திடவும்,

"குறவாணர் குன்றில் உறை பேதை கொண்ட
கொடிதான துன்ப மயல் தீர"

சீவனென்னும் ஆன்மா ஐம்புலனாம் வேடுவரின் ஆளுகையில் அகப்பட்டு உடலென்னும் மலைக்குள்ளே உனைச் சேரும் வழியின்றி உழலுவதைப் பார்க்கிலையோ! பரமாத்மா உடன் சேரும் நாளைத்தான் ஜீவாத்மா
வெகுநாளாய்க் காத்திருந்து விருப்புடனே நாடுதம்மா! ஐம்புலனும் வேடுவராய் அலைக்கழித்து கொடுமைசெய மலைநடுவே பதுங்கியிரும் பறவை படும் துயர் போல ஜீவாத்மா மயக்குற்ற துயர் நீங்கி சுகம் விளைய,

"குளிர்மாலையின்கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ"

குளிர் பரவும் மாலைநேர வேலையதில் நின் மார்பில் சூடிநிற்கும் மணமாலை தனைத் தந்து என் துயர் தீரும் நிலைதந்து இவண் வந்து
எனைச் சேர்த்து அணைய மாட்டீரோ, குமரவேளே!!!

அலைவாய்- திருச்செந்தூர்.

பொருளுக்கு நன்றி- VSK.

No comments:

Post a Comment